இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட68 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட68 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

வெள்ளி, மார்ச் 11,2016,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்

இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்திலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார். 4 மீனவர்களும் பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, அந்த பகுதி பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்த பகுதி என கூறியுள்ளார்.

1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் இந்தியா செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு என ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது, பறிமுதல் செய்யப்படும் படகுகள் நீண்ட காலமாக பயன்படுத்தபடாமல் உள்ளதால் அவை சேதமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே, 68 மீனவர்களையும், 78 படகுகளையும் மீட்க, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.