இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்  ஜெயலலிதா கடிதம்

புதன், ஜனவரி 20,2016,

இலங்கை கடற்படை கைது செய்த 6 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த 17-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் 19-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, கைது செய்யப்பட்ட 104 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 66 படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த நேரத்தில், மேலும் இரண்டு கைது நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மீனவர்களுடன் 68 படகுகளையும் விடுவிப்பதற்கு ராஜதந்திர வழிகளில் துரிதமான நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு தாங்கள் உடனடியாக உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டு உள்ளார்.