இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைந்து அழைத்து வர நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைந்து அழைத்து வர நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி , ஜனவரி 15,2016,

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்களை தமிழகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர்.
இலங்கை ராணுவத்தினரால் அவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார்.
பிரதமருக்கு இதுவரை 82 கடிதங்கள்: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடந்த 2011 மே முதல், இதுவரை 82 கடிதங்கள் வாயிலாக பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பாரம்பரிய பாக் வளைகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, கடந்த நவம்பர் முதல் ஜனவரி 5 வரை இலங்கைக் கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையறிந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நாள்களில் ஏழு கடிதங்களை பிரதமருக்கு எழுதியிருந்தார்.
அந்தக் கடிதங்களில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 104 அப்பாவி தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இடைவிடாத முயற்சி: முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சிகளால், இலங்கை சிறையில் உள்ள நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சார்ந்த 104 தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க இலங்கை அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களில், முதல் கட்டமாக 55 தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றங்களால் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள தமிழக மீனவர்கள் இன்னும் ஓரிரு நாள்களில் விடுவிக்கப்படுவார்கள். விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.