இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 96 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர் : தங்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 96 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர் : தங்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால், இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 96 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 99 மீனவர்கள், தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர், படகுகளுடன் பிடித்துச் சென்றனர். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர், இம்மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு, வாடி வந்தனர். இவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, பல முறை கடிதங்கள் எழுதினார். முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக, 99 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. அதன்படி, இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த 96 மீனவர்கள்நேற்று காரைக்கால் துறைமுகத்தை வந்தடைந்தனர். எஞ்சிய 3 மீனவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மீனவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.