இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 126 பேர், தாயகம் வந்தடைந்தனர் – தங்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 126 பேர், தாயகம் வந்தடைந்தனர் – தங்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர முயற்சிகளையடுத்து, இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்களும் தாயகம் திரும்பினர். தங்களை விடுவிக்க அயராது முயற்சி மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

பாரம்பரிய பாக் நீரின கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்கதையாக உள்ளது. இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை, அவர்களது படகுகளுடன் பத்திரமாக விடுவிக்க முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, பிரதமருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். முதலமைச்சரின் தீவிர முயற்சி காரணமாக இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 126 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் அனுராதபுரம் சிறையில் இருந்து, மன்னார் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட 48 தமிழக மீனவர்கள் நேற்று ராமேஸ்வரம் திரும்பினர்.

தாயகம் திரும்பிய மீனவர்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக அரசு சார்பில் உணவு, உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தங்களை விடுவிக்க அயராது முயற்சி மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

பருத்தித்துறை மற்றும் ஊர்காவல் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட மற்ற 78 தமிழக மீனவர்களும், இந்திய கடலோர காவல்படை கப்பல் மூலம் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 49 பேர் நாகப்பட்டினத்தையும், 16 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தையும் மற்ற 13 பேர் ராமேஸ்வரத்தையும் சேர்ந்தவர்கள்.

அமைச்சர் திரு.K.A. ஜெயபால், மீனவர்களை வரவேற்று தேவையான உதவிகளை வழங்கினார். மீனவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு தமிழக அரசு செலவிலேயே அனுப்பிவைக்கப்பட்டனர்.