இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 47 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 47 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதன், டிசம்பர் 23,2015,

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் வாடும் 47 மீனவர்களையும், 57 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து 6 தமிழக மீனவர்கள், விசைப்படகு ஒன்றில் கடந்த 19-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, இலங்கை காங்கேசன்துறைக்கு கொண்டு சென்ற மேலும் ஒரு சம்பவம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அடிக்கடி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது – பாக் ஜலசந்திப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் மீண்டும் நடத்தப்படும் தாக்குதல் மற்றும் சிறை பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்- தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய வாழ்வாதாரமான பாக் ஜலசந்திப் பகுதியில், அமைதியான முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்- 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா – இலங்கை இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து, தக்க ஆதாரங்களுடனும், சட்டப்பூர்வ ஆவணங்களுடனும் தாம் உச்சநீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளதாலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசும் பின்னர் தன்னை வாதியாக இணைத்துக் கொண்டுள்ளதாலும் இந்தியா- இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லை விவகாரம் முடிந்துவிட்ட பிரச்சனையாக கருதக்கூடாது என்பது தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாடு ஆகும் என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதியும், அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதியும் பிரதமரிடம் தாம் நேரில் அளித்த மனுக்களில் குறிப்பிட்டுள்ளபடி, ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ஆயிரத்து 520 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த விரிவான சிறப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்றும், மீன்பிடி துறைமுகங்களை ஆழப்படுத்த ஆண்டுதோறும் 10 கோடி ரூபாயை மானியமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு, மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுநாள் வரை 56 மீன்பிடிப் படகுகளும், மீன்பிடி சாதனங்களும் பல மாதங்களாக இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்- நீண்டகாலமாக படகுகளை பயன்படுத்தாமல் இருப்பதும், அண்மையில் பெய்த கடுமையான வடகிழக்கு பருவமழை காரணமாக, இந்தப் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும் – தற்போது தற்காலிகமாக வாழ்வாதார பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ஏழை மீனவர்கள், மீன்பிடிப் படகுகள் சேதமடைந்தால் நிரந்தரமாக வாழ்வாதார பாதிப்புக்கு ஆளாக நேரிடும். – எனவே, ஏழை மீனவர்களின் இப்படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் புதுப்பிக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டியது அவசியம் எனவும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.மேலும், படகு பழுதானதால், கடந்த மாதம் 8-ம் தேதி இலங்கையில் கரை ஒதுங்கிய 4 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டு, கடுமையான முறையில் இலங்கை அதிகாரிகளுக்கு கொண்டு சென்று உடனடியாக கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் உட்பட அந்நாட்டில் உள்ள 47 மீனவர்களையும், 57 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் – மேலும், கடந்த மாதம் 8-ம் தேதி படகில் ஏற்பட்ட பழுது காரணமாக, இலங்கையில் கரை ஒதுங்கிய மோட்டார் பொருத்தப்பட்ட படகில் இருந்த 4 இந்திய மீனவர்களையும் உடனடியாக தாயகம் அழைத்து வர பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தமது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.