இலவச அரிசி வழங்கும் திட்டம் : தமிழகத்தைப் பின்பற்றுமாறு பிகாருக்கு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்

இலவச அரிசி வழங்கும் திட்டம் : தமிழகத்தைப் பின்பற்றுமாறு பிகாருக்கு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்

செவ்வாய், மார்ச் 29,2016,

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி வழங்குவதைப் போல பிகாரிலும் அந்த நடைமுறையை நிதீஷ் அரசு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிகார் தலைநகர், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
பிகாரில் உள்ள 8.5 கோடி பயனாளிகளுக்காக மாதந்தோறும் 1.83 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும், 2.74 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
ஆனால், அவற்றை முறையாக விநியோகிப்பதில்லை என்று பிகார் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பயனாளிகள் முன்வைக்கின்றனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசி, கோதுமைக்கான மானியச் செலவினங்களில் 90 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், பிகார் அரசு அந்த மாநில பயனாளிகளுக்கு இலவசமாக அவற்றை விநியோகிப்பதில்லை.
தமிழகத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதை நிதீஷ் குமார் தலைமையிலான பிகார் அரசும் பின்பற்ற வேண்டும் என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.