இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை எழுச்சிதின பொதுக்கூட்டங்கள் 7-ம் தேதி நடைபெறும்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை எழுச்சிதின பொதுக்கூட்டங்கள்  7-ம் தேதி நடைபெறும்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், பெப்ரவரி 02,2016,

கழக அரசின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில், வரும் 7-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அ.இ.அ.தி.மு.க. இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் எழுச்சிதின பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் இக்கூட்டங்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க.விற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்; புத்திளமை காண வேண்டும் என்ற நோக்கத்தில், தமது சிந்தனையில் உதித்த “கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை” 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பாசறையில் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் நமது உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகளாக விளங்கி வருகின்றனர் – நாளைய கழகத்திற்கு நாற்றங்காலாகவும் இந்தப் பாசறை திகழ்ந்து வருகிறது – நாடு, மொழி, இனம், இந்த மூன்றையும் உயர்த்தும் எண்ணத்தை இளம் நெஞ்சங்களில் பதிக்கும் முற்போக்குக் களமான இந்தப் பாசறையில், தமது தலைமையினால் ஈர்க்கப்பட்டு லட்சோப லட்சம் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் புதிய உத்வேகத்துடனும், மாறாத உறுதியுடனும், லட்சிய நோக்கத்துடனும், விசுவாசத்துடனும் கழகப் பணிகளை ஆற்றி வருகின்றனர் – தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையிலும்; மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமது தலைமையிலான கழக அரசு நிகழ்த்தி வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையிலும், வரும் 7-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி `பாசறை எழுச்சி தினப் பொதுக்கூட்டங்கள்’ நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள் – மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், மாவட்டக் கழக நிர்வாகிகளுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பாசறை நிர்வாகிகளுடனும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை சார்பில், பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ள இடங்கள், தலைமை ஏற்கும் நிர்வாகிகள் அடங்கிய பட்டியலை பாசறை செயலாளர் திரு.ப. குமார் வெளியிட்டுள்ளார்.