வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

வியாழன் , ஏப்ரல் 28,2016,

உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன் என தொடங்கும் பிரசார சிறுஉரை மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கும் வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் வேகமாக பரவி வருகிறது.தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார யுக்திகளை கையாண்டு வருகின்றன.வாக்காளர்களின் வீடுகளுக்கே தொலைக்காட்சிகள் மூலமாகவும், செல்போன்களில் குறுந்தகவல், ‘வாட்ஸ் அப்’ மூலமாகவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

பேஸ்புக், ‘வாட்ஸ் அப்’, டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தும் இளம் வாக்காளர்களை கவர தகவல் தொழில்நுட்பத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசி வருகிறார். அதேபோல தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப ‘வாட்ஸ் அப்’ மூலமாகவும் வாக்கு சேகரித்து வருகிறார். ‘வாட்ஸ் அப்’ மூலம் அ.தி.மு.க. புதிய தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

இதில், தி.மு.க. அரசோடு ஒப்பிட்டு மின்சார உற்பத்தியில் அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை எடுத்துக்கூறி ஜெயலலிதா இரு கரங்களையும் கூப்பி வாக்காளர்களிடம் வாக்கு கேட்கும் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.‘வணக்கம், உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன். நினைவிருக்கிறதா, உங்களுக்கு 15 மணி நேரம் மின்வெட்டு…? பள்ளி பிள்ளைகள் படிக்கவும் முடியவில்லை. தொழில்கள் எல்லாம் முடங்கின.துன்பங்கள்தான் பெருகின. அது அந்தக் காலம். இப்பொழுது, தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் ஆகியுள்ளது. எங்கும், எப்பொழுதும் எல்லோருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. இந்த மகத்தான சாதனை தொடர வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கே. நன்றி வணக்கம்!’ என 32 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா பேசியுள்ளார்.