உங்கள் வளர்ச்சிக்காக,மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்யவேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும் : தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுச்சி உரை

உங்கள் வளர்ச்சிக்காக,மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்யவேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும் : தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுச்சி உரை

செவ்வாய், ஏப்ரல் 12,2016,

உங்கள் வளர்ச்சிக்காக, உங்கள் மகிழ்ச்சிக்காக, என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்தத் தாய்க்கு தெரியும். அதை நிச்சயம் செய்வேன். கடந்த ஐந்தாண்டுகளில் செய்த திட்டங்களை விட, இன்னும் அதிகமான நல்ல திட்டங்களை உங்களுக்காக செயல்படுத்துவேன் என்று விருதாசலத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான அ.தி.மு.க. தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரம்பலூர் (தனி), குன்னம், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 13 சட்டமன்றத் தெ மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது,  கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக மாற வேண்டும். தமிழக மக்கள் எவ்வித அச்ச உணர்வும் இன்றி வாழ வேண்டும். தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும். அந்த வளர்ச்சியின் பயனை ஒரு சிலர் மட்டும் பெறாமல், ஒரு குடும்பத்தினர் மட்டும் பெறாமல், ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களும் பயன் அடைய வேண்டும். ஏழை, எளியவர்களின் வாழ்வில் வசந்தம் வீசிட வேண்டும். ஏழைகள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க திறன் பெற்றிட வேண்டும். அதுவரை அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு அளித்திட வேண்டும் என்னும் காரணங்களுக்காக, தமிழகத்திலே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைய நீங்கள் 2011-ல் வாக்களித்தீர்கள். நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்தால் உங்கள் வாழ்வு ஏற்றம் பெற்றது. தமிழகம் வளர்ச்சிப் பாதையில் விரைந்துள்ளது. இந்த வளர்ச்சியும், தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள மலர்ச்சியும் தொடர்ந்து நிலைத்திட, எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி தொடர வேண்டும்.

எனவே, வருகிற மே 16-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்ளவே இன்று இங்கே உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் ஏழை எளியோர் ஏற்றம் பெறும் வகையிலான எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், மிகக் குறைந்த விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய 50,000 ரூபாய் வரையிலான திருமண உதவித் திட்டம், 12,000 ரூபாய் மகப்பேறு நிதி உதவித் திட்டம், விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், 1,000 ரூபாய் முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டம், இவை எல்லாம் நான் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளின்படி செயல்படுத்தப்பட்ட திட்டங்கள். நான் சொன்னதை செய்தேன். ஆனால் அதற்கும் மேலாக, சொல்லாத பலவற்றையும் செய்தேன். அவ்வாறு நான் அறிவிக்காத, நீங்களே எதிர்பார்க்காத பல திட்டங்களில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மலிவு விலையில் காய்கறிகள் வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள், குறைந்த விலையில் அரசு கேபிள் டிவி இணைப்பு என ஏழை எளியோருக்கான பல்வேறு நலத் திட்டங்கள் உங்கள் அன்புச் சகோதரியின் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

என் அன்பார்ந்த பொதுமக்களே, “மக்களால் நான், மக்களுக்காகவே நான்”, “உங்களால் நான், உங்களுக்காகவே நான்” என்ற அடிப்படையில் தான் எனது பொது வாழ்வு அமைந்துள்ளது. “சொன்னதைச் செய்வேன், செய்வதைத் தான் சொல்வேன்” என்று ஏற்கெனவே நான் சொன்னதுண்டு. ஆனால், இப்போது சொல்லாததையும் செய்திருக்கிறேன் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்பொழுது நான் குறிப்பிட்ட திட்டங்கள் எல்லாம் நீங்களே எண்ணிப் பார்க்காதவை, எதிர்பார்க்காதவை. ஒரு தாய்க்குத் தான் தன் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பது தெரியும்.

அது போல, வரும் காலங்களிலும் உங்களுக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியும். உங்கள் நன்மைக்காக, உங்கள் மேன்மைக்காக, உங்கள் வளர்ச்சிக்காக, உங்கள் மகிழ்ச்சிக்காக, என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்தத் தாய்க்கு தெரியும். அதை நிச்சயம் செய்வேன். இந்த, கடந்த ஐந்தாண்டுகளில் செய்த திட்டங்களை விட, இன்னும் அதிகமான நல்ல திட்டங்களை உங்களுக்காக செயல்படுத்துவேன் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.