உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் : மாபா பாண்டியராஜன்

உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் : மாபா பாண்டியராஜன்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 21, 2017,

சென்னை : அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்திளார்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். தேர்தல் ஆணையரை சந்திக்கும் போது ஓபிஎஸ் அணி சார்பில் என்னென்ன கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாஃபா பாண்டியராஜன் 22ஆம் தேதி தேர்தல் ஆணையரை சந்திக்கும்போது, சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் 2 மாதங்களுக்குள் தேர்தல் கமிஷன் மேற்பார்வையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுச் செயலாளருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களுடன் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கூட்டு தலைமையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது உள்பட 5 கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாக கூறினார்.

இரட்டை இலை சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மாஃபா பாண்டியராஜன், ஓ.பன்னீர்செல்வம் சொன்னபடி தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்றார். இரட்டை இலை சின்னத்துக்கு உரியவர்கள் நாங்கள் தான் என்று கூறிய அவர், எங்களை பொறுத்தவரையில் இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.

ஆர்கே.நகரில் பணம் பட்டுவாடா செய்வது குறித்து புகார் தெரிவித்து இருப்பதாக அவர் கூறினார். தேர்தல் கமிஷன் நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். ஆர்.கே.நகரில் ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வழங்கி இருக்கிறார்கள் என்றும் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டினார்.

ஆர்.கேநகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் தங்களுக்கு சிறப்பான வரவேற்பு தருவதாகவும் பாண்டியராஜன் கூறினார்.