உயரிய வாழ்வு, நீங்காத வளம் தரும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்:முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து

உயரிய வாழ்வு, நீங்காத வளம் தரும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்:முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து

வியாழன் , டிசம்பர் 31,2015,
மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதல்வர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்கிடவும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் எவரும் இல்லை என்ற நிலையினை அடைந்திடவும், பெண்களின் வாழ்வு மேம்படவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட அனைவருக்கும் தங்கு தடையின்றி தரமான கல்வி கிடைத்திடவும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதையும், அதன் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் புதிய வரலாறு படைத்து வருவதையும் மக்கள் அனைவரும் நன்கறிவர் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சமூகப் பொருளாதார நிலையில் தமிழக மக்கள் ஏற்றம் பெற்று விளங்கிட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சீர்மிகு திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வினை வளமாக்கிக் கொள்வதுடன், உறுதி கொண்ட உள்ளத்துடன் ஒன்றுபட்டு நின்று, தடைகளைத் தகர்த்து, அயராது உழைத்து பொற்காலத் தமிழகம் இன்னும் பல சிறப்புகளைப் பெற்றிட இப்புத்தாண்டில் உறுதியேற்போம் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மலரும் இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாகவும் முதல்வர் ஜெயலலிதா தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.