உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற உழைக்க வேண்டும் : அ.தி.மு.க செயற்குழுவில் தீர்மானம்

உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற உழைக்க வேண்டும் : அ.தி.மு.க  செயற்குழுவில் தீர்மானம்

ஞாயிறு, ஜூன் 19,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் வியூகத்தின் படியும், மேலான ஆணையின் படியும் செயல்பட்டு, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டித்தர சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க  செயற்குழுவில்  சூளுரை ஏற்கப்பட்டு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையிலும், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

அ.தி.மு.க 32 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தொடர்வெற்றியைப் பெற்று ஆட்சியில் தொடரும் சாதனையை படைத்திருக்கிறது. அ.தி.மு.க நிகழ்த்தி இருக்கும் இந்தச் சாதனை முற்றிலும் அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் ஆற்றல் மிகு தலைமையின் அயரா உழைப்பு காரணமாக விளைந்திட்ட ஒன்றே ஆகும். தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறுகின்ற வகையில் திட்டங்களைத் தீட்டி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழக வாக்காளர்களின் பேராதரவை முதல்வர் ஜெயலலிதா பெற்றதன் காரணமாகவே, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, ஒரு கட்சி கூட்டணி எதுவும் அமைத்திடாமல், தேர்தல்களத்தில் ஒரே சின்னத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, தொடர் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை அடைவதற்கு தன்னுடைய அனைத்து ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தி முதல்வர் ஜெயலலிதா உழைத்ததை இந்த நாடு நன்கு அறியும்.

தன்னையே வருத்திக் கொண்டு இரவும் பகலும் தேர்தல் பணிகளை திட்டமிட்டு, அந்தப் பணிகள் செயல்படுத்தப்படும் விதத்தை மேற்பார்வையிட்டு, நிலைமைக்கு ஏற்ப வியூகங்களைத் தொடர்ந்து மாற்றி அமைத்து, எதிர்ப்போரின் எண்ணிக்கை ஏராளமாக இருந்த போதும் தன்னந்தனியாக அவர்கள் அனைவரையும் வீழ்த்தும் வண்ணம் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, ஆணித் தரமான தேர்தல் பிரச்சார உரைகளை நிகழ்த்தி, மக்கள் மனங்களைக் கவர்ந்து, மகத்தான வெற்றியை அ.தி.மு.கவுக்கு பெற்றுத் தந்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

முதல்வர் ஜெயலலிதா தலைமை, அ.தி.மு.கவுக்கு கிடைத்த இறை அருள். அவரது தலைமையின் கீழ்பணியாற்ற கிடைத்திட்ட வாய்ப்பு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பெற்ற வரம். தமிழக மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும் வழங்கிடும் வகையில், சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சிறப்பான வெற்றியை அ.தி.மு.கவுக்கு பெற்றுத் தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த செயற்குழு நன்றி தெரிவித்து வணங்குகிறது.

தலைமைப் பொறுப்பினை ஏற்ற காலம் தொட்டு தொடர்ந்து தன்னுடைய அயராத முயற்சியாலும், கடின உழைப்பாலும் வழிநடத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா கழகத்திற்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வண்ணம் அரும் பணியாற்றி வருகிறார். முதல்வர் ஜெயலலிதாஆணையின்படி செயல்பட்டால் கழகம் எப்பொழுதும் வெற்றிச் சிகரத்தில் நடைபோடும் என்பதை ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின் போதும் தமிழகம் பார்த்து வருகிறது.

2011 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி, அதைத்தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு கண்டிராத வெற்றி, 2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்திய நாடே வியந்து போகும்வண்ணம் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்தில் 3-வது பெரியகட்சியாக அ.தி.மு.க திகழும் நிலை, இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மகத்தான வெற்றி என்று தொடர்ந்து அ.தி.மு.கவை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்லும் அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் மேலான ஆணையின் படியும், வியூகத்தின் படியும் செயல்பட்டு, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டி, முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கரங்களில் சமர்ப்பிக்க இந்தச் செயற்குழு சூளுரை ஏற்கிறது.  இவ்வாறு அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.