உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு: மசோதா நிறைவேறியது

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு: மசோதா நிறைவேறியது

ஞாயிறு, பெப்ரவரி 21,2016,

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா பேரவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திருத்த மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதன் விவரம்:
கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றிய மன்றங்களிலும் மாவட்ட ஊராட்சிகளிலும் உள்ள இடங்களின்-பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்க வகை செய்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பெறுவதை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சியில் பெண்கள் பங்கு பெறுவதை எளிதாக்கும் வகையில் பெண்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது.
அதன்படி, இடங்களில்-பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு என்று இருப்பதை 50 சதவீதம் என அதிகரிக்கச் செய்வது தேவை என அரசு கருதுகிறது. இதற்கென 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மொத்தம் எத்தனை இடங்கள்: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் பதவியிடங்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 458 ஆக உள்ளன. இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவின் மூலமாக, இந்தப் பதவியிடங்களில் 50 சதவீதம் அளவுக்கு பெண்கள் போட்டியிட முடியும்.
புதிய சட்டத் திருத்த மசோதா மூலமாக, மாநிலத்தில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 65 ஆயிரம் இடங்களில் பெண்கள் போட்டியிடலாம்.