உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு அரசு சார்பில் மணி மண்டபம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு அரசு சார்பில் மணி மண்டபம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016,

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆற்றிய உரையில்,

நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு இன்றியமையாததாகவும் விளங்கும் வேளாண்மைத் துறைக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.  எனவே தான் வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வை வளம் பெறச் செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.  சாகுபடி பரப்பினை அதிகரித்தல்,  விவசாயத்தில் புதிய உத்திகளை கையாளுதல், விதைகள், உரங்கள் ஆகியன, உரிய நேரத்தில் கிடைக்கச் செய்தல், தேவையான பயிர்க் கடன் வழங்குதல், பாசன வசதி அளித்தல், மானிய விலையில் இயந்திரங்களை வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருவதன் காரணமாக விவசாயிகளின் வருவாய் பெருகி உள்ளது.  விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வண்ணம் ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு தானிய உற்பத்தியில் ஆண்டு தோறும் புதிய சாதனைகளை எனது தலைமையிலான அரசு நிகழ்த்தி வருகிறது.  எனவே தான், 2011-2012 ஆம் ஆண்டில்  உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்தற்காகவும், 2013-2014 ஆம் ஆண்டில் பயறு உற்பத்தியில் சாதனை படைத்தற்காகவும்,  2014-2015 ஆம் ஆண்டில் சிறு தானிய உற்பத்தியில் சாதனை படைத்தற்காகவும்  மத்திய அரசின் ”கிரிஷி கர்மான் விருதை” தமிழ்நாடு பெற்றுள்ளது.

விவசாயிகள் நலன் காக்கும் வகையில் இப்போது அரசு தானே முன் வந்து திட்டங்கள் செயல்படுத்துகிறது என்றாலும், முன்பெல்லாம் போராட்டங்கள் மூலமே விவசாயிகள் பல்வேறு சலுகைகளைப்  பெற முடிந்தது. விவசாயிகளின் கோரிக்கைகளை  அரசுக்கு தெரிவிக்கும் விதமாக 1966-ஆம் ஆண்டு கோவை வடக்கு தாலுகா விவசாயிகள் சங்கம் என்ற ஒரு சங்கம் திரு வேலப்பன் அவர்களை தலைவராகவும், திரு.நாராயணசாமி நாயுடு அவர்களை செயலாளராகவும் கொண்டு துவங்கப்பட்டது. பின்னர் இது கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக 1967-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவ்வாறு, விதை ஊன்றப்பட்ட விவசாயிகள் சங்கம் 1973-ஆம் ஆண்டு தமிழக விவசாயிகள் சங்கமாக மலர்ந்து விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, விவசாயிகளுக்கான பல்வேறு சலுகைகளை, பெற்றுத் தந்தது.  தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.நாராயணசாமி நாயுடு அவர்கள், 1984-ஆம் ஆண்டு அவர் மறையும் வரை தொடர்ந்து தலைவராகவே இருந்தார்.  இன்றைக்கும் பல்வேறு விவசாய அமைப்புகளாலும், விவசாயிகளாலும் பெரிதும் மதிக்கப்படுபவர் திரு.நாராயணசாமி நாயுடு அவர்கள் ஆவார். 

கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், உழவர் பெருந்தலைவர் திரு.நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு, கோவையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும், 1970-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பல்வேறு விவசாயிகள் போராட்டங்களின் போது உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் நான் அறிவித்திருந்தேன்.

எனது இந்த அறிவிப்பின் அடிப்படையில், உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு, அன்னாரின் நினைவைப் போற்றி, சிறப்பிக்கும் வகையில், கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  
1970 முதல் 1980 வரை நடைபெற்ற விவசாயிகளின்  போராட்டங்களில் காவல் துறை துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான விவசாயிகளின் குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் போராட்டங்களில் 47 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.  அவர்களில் 7 பேருக்கு வாரிசுதாரர்கள் இல்லை.  எனவே, மீதமுள்ள 
40 விவசாயிகளின் குடும்பங்களைச் சார்ந்த, வாரிசுதாரர்களுக்கு ஒட்டு மொத்தமாக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி  வழங்கப்படும். இந்த 40 விவசாயிகளின் குடும்பங்களுக்கு மொத்தம் 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.