உழைப்பால் வெற்றியை உருவாக்கு முயற்சியை அதற்கு எருவாக்கு:திருமணவிழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

உழைப்பால் வெற்றியை உருவாக்கு முயற்சியை அதற்கு எருவாக்கு:திருமணவிழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

புதன்கிழமை, பிப்ரவரி 10, 2016,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று  காலை 11 மணிக்கு ஆர்.வைத்திலிங்கம்,ஆர்.காமராஜ்,எஸ்.பி.சண்முகநாதன்,முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகிய 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமைதாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. என்னும் மாபெரும் குடும்பத்தின் திருமணங்களை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்துகின்ற பொன்னான வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்திருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடை கிறேன்.  மங்கலம் பொங்கும் இந்த மகிழ்ச்சிகரமான நன்னாளில், மலர்ந்த முகங்களோடு இங்கே வீற்றிருக்கின்ற எனது குடும்ப உறுப்பினர்களாகிய உங்களையெல்லாம்  ஒரே இடத்தில் காண்பதிலும், உங்களிடையே உரையாற்று வதிலும், நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டின் நலன்கள் மீதோ, தமிழக மக்களின் நலன்கள் மீதோ அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள்  பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன. அவர் களது ஒரே குறிக்கோள் மக்கள் சக்தி படைத்த மாபெரும் இயக்கமாம் அ.தி.மு.க.வை வசை பாடுவது தான்.   நம் வளர்ச்சி பொறுக்காமல் அவர்கள் நம்மை வசை பாடுகிறார்கள். இது தான் நம் வளர்ச்சியின் அளவுகோல். “பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கிக் கொண்டு வளர வேண்டும்“ என்று அடிக்கடி பேரறிஞர் அண்ணா  கூறுவார்.

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கிக் கொண்டு மக்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் மரியாதையும் கொண்ட இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் நமது இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இங்கே சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

“உழைப்பால் வெற்றியை உருவாக்கு. முயற்சியை அதற்கு எருவாக்கு” என்பதற்கேற்ப, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி  பெறும் வண்ணம் கழகக் கண்மணிகளாகிய நீங்கள் எல்லாம் களப்பணியாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களால் முடியாதது வேறு எவரால் முடியும்? நிச்சயம் இதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்பதைத் தெரிவித்து, ‘இல்லறமல்லது நல்லற மன்று’ என்னும் இன்மொழி வழி இணைந்து உறவினர் நண்பர் புடை சூழ மணவாழ்க்கை என்னும் ஓடத்தில் பயணம் செய்யத் தொடங்கி இருக்கும் மணமக்கள், தேனின் இனிமை போலும், தமிழின் சுவை போலும் ஒருங்கிணைந்து, பெற்றோர் சுற்றத்தார் நல்லறம் காத்து, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.