எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் கின்னஸ் சாதனை படைப்பார் : சட்டபேரவையில் அமைச்சர்கள் பாராட்டு

எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் கின்னஸ் சாதனை படைப்பார் : சட்டபேரவையில் அமைச்சர்கள் பாராட்டு

சனி, பெப்ரவரி 20,2016,

– அரசு ஊழியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா , 2016 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைப்பார் என்று சட்டபேரவையில் அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.  தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா, சட்டபேரவை விதியின் 110 கீழ் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

குடும்ப நலநிதிக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட 1.50 லட்சத்திலிருந்து ரூ 3 லட்சமாக உயர்த்தப்படும் என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி  ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ரூ ஆயிரத்தில் இருந்து 1500 ஆக அதிகரிக்கப்படும் என்று அவர்கள் ஓய்வு பெற்றால் வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்படும் என்றும் கெளரவ  விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து வல்லுனர் குழு அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டபேரவையில் அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு சட்டபேரவையில் அமைச்சர்களும் உறுப்பினர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி:-
2011 ஆம் ஆண்டு தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை முதல்வர் ஜெயலலிதா நூற்றுக்கு நூறு நிறைவேற்றி விட்டார். கடந்த ஆட்சியின் போது சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது கருணாநிதி இந்த போராட்டத்திற்கு அடிபணிய மாட்டோம் என்று மிரட்டினார். ஆனால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோதும் தாயை போல கனிந்த பார்வையிட்டு அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார். அவரை சத்துணவு ஊழியர்கள் முதல் குழந்தைகள் வரை வாயார வாழ்த்துவார்கள்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்:-
கெளரவ விரிவுரையாளர்களின் சம்பளம் ரூ 4 ஆயிரமாக இருந்தது அதை 10 ஆயிரமாக உயர்த்தியவரும் ஜெயலலிதா தான். இப்போது 15 ஆயிரமாக உயர்த்தியிருப்பவரும் முதல்வர் ஜெயலலிதா தான். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களுக்கு பணி்ப்பாதுக்காப்பு இல்லாத நிலை இருந்தது. அதை மாற்றி இந்தியாவிலேயே தனியார் பல்கலைக்கழகமாக அண்ணா மலை பல்கலைக்கழகத்தை அரசு பல்கலைக்கழகமாக்கி சாதனை படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா . 2016 ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி கின்னஸ் சாதனை படைப்பார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:-
அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பாடுபடும் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா உலகத்தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடுவோம். கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவுக்கும், தேமுதிகவுக்கு மக்கள் முட்டையை பரிசாக அளித்தார்கள். வரும் சட்டமன்றத்தேர்தலில் அதை விட பெரிய மூட்டை மக்கள் வழங்க தயாராகி விட்டார்கள். தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்ற குரல் தமிழகம் முழுவதும் ஒலிக்கும்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:-
அரசு ஊழியர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்களுக்கு பல திட்டங்களை தந்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி, முன்னே்ாடி திட்டங்களை தந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா , செவிலியர்களுக்கு அவர் அள்ளி அள்ளி தந்த அட்சய பாத்திரம், பரிசு பெட்டகம் தந்த பாசப்பெட்டகம் முதல்வர் ஜெயலலிதா.

சபாநாயகர் தனபால்:-
அரசு ஊழியர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா கொண்டிருந்த பாசத்திற்கும் பரிவுக்கும் இது ஒரு உதாரணம். சட்டபேரவையின் வைர விழாவின்போது உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்க முயற்சித்த போது சட்டபேரவை செயலக ஊழியர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள் தர வேண்டும் என்று ஆணையிட்டவர் முதல்வர் ஜெயலலிதா தான் வேறு மக்கள் வேறு என்று எண்ணாதவர் முதல்வர் ஜெயலலிதா. ஈகை உடைய முதல்வருக்கு நிச்சயம் வாகை உண்டு.
இவ்வாறு அமைச்சர்களும் சபாநாயகரும் பாராட்டினர்.

ரங்கராஜன் ( காங்கிரஸ் ):-
அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த திட்டங்களை வரவேற்கிறேன். நேற்று முன்தினம் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து சலுகையை வழங்கியுள்ளார். அதற்காகவும் பாராட்டுகிறேன். நான் 5 ஆண்டுகளாக என் தொகுதிக்காக வைத்துள்ள கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா கனிவோடு நிறைவேற்றியுள்ளார். எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சியாக பார்க்காமல் என் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா பட்டுக்கோட்டை மக்கள் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் 24 ம்தேதி பிறந்தநாள் காணும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜவாஹில்லா (மனிதநேயமக்கள் கட்சி):-
முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சலுகைகளால் அரசு ஊழியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர். 40 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் பெற்று வந்த குடும்ப நல நிதியை 1-50 லட்சத்தில் இருந்து ரூ 3 லட்சமாக அதிகரித்திருப்பது பாராட்டத்தக்கது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவித்த புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் கொண்டு வர வல்லுனர் குழு அறிவித்த முதல் மாநிலம் தமிழகம் தான் மீண்டும் நிர்வாக தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கலையரசு ( பாமக ):-
பிறக்கும்போதே தலைமை பண்போடு பிறந்தவர் அம்மா. 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் யுத்தத்தின்போது தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி நாட்டுக்காக தந்தவர் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதாவால் இந்த மண்ணுக்கே பெருமை. அவர் நூறாண்டுகள் இந்த மண்ணை ஆள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் அருண் சுப்ரமணியம்( அதிருப்தி தேமுதிக) ராமசாமி ( புதிய தமிழகம் ) தனியரசு , கதிரவன், செ.கு. தமிழரசன் உள்ளிட்ட பலரும் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை பாராட்டி வரவேற்றனர்.

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை வரவேற்று பல்வேறு கட்சியை சேர்ந்த செ.கு.தமிழரசன்( குடியரசு) தனியரசு,( கொங்கு இளைஞர் பேரவை) கதிரவன்,( பார்வர்டு பிளாக்) நாராயணன்,( சமத்துவ மக்கள் கட்சி) ராமசாமி ( புதிய தமிழகம் ), அருண் சுப்ரமணியம் ( அதிருப்தி தேமுதிக ) உள்ளிட்ட உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.