போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு!

போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு!

ஞாயிறு, பெப்ரவரி 21,2016,

இன்று (21-ம் தேதி) முதல் போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”சட்டம் – ஒழுங்கைப் பராமரித்து, பொது அமைதியை நிலவச் செய்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் குற்ற நிகழ்வுகளை தடுத்தல், குற்றங்கள் நிகழும் போது விஞ்ஞான ரீதியான புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனைப் பெற்றுத் தருதல் என பல்வேறு இன்றியமையாப் பணிகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அச்சம் ஏதுமின்றி பாதுகாப்பு உணர்வுடன் வாழ்வதற்கு காவல் துறையினரின் விழிப்பான பணி பெரிதும் உதவுகிறது. சட்டம் – ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பது மற்றும் குற்ற நிகழ்வுகள் தொடர்பான பணிகள் மட்டுமன்றி போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, சீரான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் சாலையை பயன்படுத்துவோர் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதும் காவல் துறையினரின் பணிகளில் ஒன்றாக உள்ளது. போக்குவரத்துக் காவல் துறையினர் கடும் வெயில் காலங்களிலும், சாலை சந்திப்புகளில் பணி புரிய வேண்டியுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருயது போக்குவரத்து காவல் துறையினரை பாதுகாக்கும் வகையில், எலுமிச்சம் பழச்சாறு வழங்கும் ஒரு புதிய திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டு அறிவித்தார்கள். 2012-ம் ஆண்டு நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, 

”போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது காவல் துறை பணிகளில் முக்கியமான ஒன்றாகும். இப்பணியைச் செய்யும் காவல் துறையினர் கோடைக் காலத்தில் கடும் வெயிலில் சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும், நிழலுக்கு ஒதுங்கக் கூட இயலாத இடங்களில் நின்று பணிபுரிய வேண்டியுள்ளது. இவர்கள் பொதுவாக, ஒரு நாளில் காலையில் நான்கு மணி நேரமும், மதியம் நான்கு மணி நேரமும், வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் பணிபுரிகின்றனர். இவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில், இவர்களுக்கு பணியில் இருக்கும் போது, காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை, உள்ள நேரத்தில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எலுமிச்சம் பழச்சாறு வழங்கப்படும். இது கோடை காலத்தில் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரையில் சுமார் 6,500 பேர் இதனால் பயனடைவர்”

என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார்கள். இதன்படி போக்குவரத்துப் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு கோடை காலத்தில் நான்கு மாதங்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு வழங்கப்படுகிறது. எலுமிச்சம் பழச்சாறு ஒவ்வொரு நாளும் 4 முறை வழங்கப்படுகிறது. எலுமிச்சம் பழச்சாறுக்குப் பதிலாக மோர் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறையினரில் சிலர் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதம் முதல் ஜுன் வரையிலான நான்கு மாத காலத்திற்கு போக்குவரத்து காவலர்களுக்கு அவரவர் விருப்பப்படி எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க ஆணையிட்டுள்ளார்கள். இதற்கான அரசாணை 14.12.2015 அன்று வெளியிடப்பட்டது. 

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துக் காவலர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி பணி புரியும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்படும் எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் 21.2.2016 முதல் வழங்கும்படி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி இன்று (21.2.2016) முதல் போக்குவரத்துக் காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் அவரவர் விருப்பப்படி வழங்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.