என்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை ; முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன்

என்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை ; முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 10, 2017,

சென்னை : அதிமுகவில் இருந்து நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன் கூறினார்.சசிகலாவை  கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகவும், அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் மதுசூதனன் தெரிவித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மதுசூதனன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிமுகவிலிருந்து நீக்குவதற்கு சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவரை நான் கட்சியிலிருந்து நீக்கி விட்டேன்.அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்வு செய்வதற்கு என்று தனி விதிமுறைகள் உள்ளன. கட்சியின் அடிமட்டத் தொண்டன்தான் தேர்வு செய்ய முடியும். தாற்காலிகப் பொதுச்செயலாளர் பதவிக்கு கட்சியில் அதிகாரமே இல்லை.ஜெயலலிதாவால் கட்சி நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்ட சசிகலா, 2012-இல் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அந்தக் கடிதத்தில், “அரசியலில் ஈடுபட மாட்டேன். ஜெயலலிதாவுக்கு உதவி செய்யவே வந்துள்ளேன்’ என குறிப்பிட்டார். இப்போது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் வகையில் முதல்வராக ஆசைப்படுகிறார்.

எனவே, பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தகுதி அற்றவர். கட்சியின் தொண்டர்களால் தேர்வு செய்யப்படாத சசிகலாவின் தேர்வை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன். தேர்தல் ஆணையம் நல்ல முடிவைக் கூறும் என்றார்.