எம்.ஜி.ஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்

எம்.ஜி.ஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்

செவ்வாய், ஜனவரி 17,2017,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை இன்று வெளியிடப்பட்டது.தலைமை அஞ்சல் அலுவலர் மூர்த்தி வெளியிட, அதனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டு வரும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று தொடங்கி ஓராண்டுக்கு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவரது சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர். உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலையை தலைமை அஞ்சல் அலுவலர் மூர்த்தி வெளியிட, அதனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்,தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.