ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது

செவ்வாய், ஜனவரி 19,2016,

புதுடெல்லி – ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த குற்றப்பத்திரிகையை 2ஜி வழக்கு தொடர்பான சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்க முடிவு செய்ய உள்ளது. சென்னையை சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன். அவரது நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவினைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பதற்கு முந்தைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நிர்ப்பந்தப்படுத்தினார் என்று ஏர்செல் சிவசங்கரன் குற்றம் சாட்டினார். ஏர்செல் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் தயாநிதிமாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் சுயஆதாயம் அடைந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஏர்செல்-மேக்சிஸ் பணமோசடி வழக்கு தற்போது டெல்லியில் உள்ள 2ஜி சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை சி.பி.ஐ நீதிபதி ஓபி சைனி நடத்திவருகிறார். மாறன் சகோதரர்கள் மற்றும் இதர நபர்கள் மீது அமலாக்கக்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த மாதம் 8ம் தேதியன்று அமலாக்கத்துறை சிறப்பு சிபிஐ நீதிபதி சைனி முன்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை தயாநிதி மாறன், கலாநிதி மாறன் அவரது மனைவில் காவேரி கலாநிதி மற்றும் தெற்கு ஆசியா எப்.எம் லிமிடெட் மானேஜிங் டைரக்டர் கே.சண்முகம் மற்றும் இரு கம்பெனிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருக்கிறது. பண மோசடியை தடுக்கும் சட்டத்தில் இந்த வழக்கினை அமலாக்கத்துறை தொடர்ந்துள்ளது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறுகையில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் அன்னிய முதலீடு மேம்பாடு வாரியம் அனுமதி அளித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது. இந்த ஒப்பந்தத்தின் போது கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு அன்னிய முதலீடு மேம்பாடு அனுமதியை அளித்து இருந்தார். தயாநிதி மாறனுக்கு மொரிஷியசை சேர்ந்த நிறுவனங்கள் மூலம் ரூ.742.58 கோடி பணம் முறைகேடாக அளிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. எஸ்.டி.பி.எல், எஸ்.ஏ.எப்.எல் ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த தொகை பெறப்பட்டிருந்தது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது.இந்த இரு நிறுவனங்களும் கலாநிதிமாறனால் நிர்வகிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐயும் மாறன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தது. அந்த அமைப்பு, மலேசிய நிறுவன அதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மலேசிய தேசிய அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட் டிவி லிமிட் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் பெகர்டு, தெற்கு ஆசியா என்டர்டெய்ன் மென்ட், அஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட் வொர்க் ஆகிய நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோரது சொத்துக்கள் முறைகேடாக நடந்த தொகைக்கு முடக்கப்பட்டது.

இதனிடையே மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை 2ஜி வழக்கு தொடர்பான சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது. சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இவ்விவகாரத்தை பரிசீலிக்க இருப்பதால் மாறன் சகோதரர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.