ஏர்செல் – மேக்சிஸ் விவகாரம்: தயாநிதிமாறன், கலாநிதிமாறன் நேரில் ஆஜராக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஏர்செல் – மேக்சிஸ் விவகாரம்: தயாநிதிமாறன், கலாநிதிமாறன் நேரில் ஆஜராக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஞாயிறு, பெப்ரவரி 28,2016,

ஏர்செல் – மேக்சிஸ் விவகாரத்தில், சன் டி.வி.க்கு 743 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரம் உள்ளதால், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், அவரது மனைவி காவேரி ஆகியோர் நேரில் ஆஜராக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் தயாநிதிமாறன் முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கைமாறாக தயாநிதிமாறனின் சகோதரர் கலாநிதிமாறனுக்கு சொந்தமான சன் டி.வி. நிறுவனத்திற்கு 742 கோடியே 58 லட்சம் ரூபாயை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் லஞ்சமாகக் கொடுத்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

742 கோடியே 58 லட்சம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றது தொடர்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் தலைமையகப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தியதில், சன் டேரக் டி.வி பிரைவேட் லிமிடெட் மற்றும் சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட் நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கலாநிதிமாறன் அவரது மனைவி காவேரி கலாநிதி, தயாநிதிமாறன் ஆகியோருக்கு சொந்தமான சன் டி.வி குழும சொத்துக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் கடந்த ஏப்ரல் மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையில், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், கலாநிதியின் மனைவி காவேரி உள்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரம் இருப்பதால் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், அவரது மனைவி காவேரி ஆகியோர், வரும் ஜூலை மாதம் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டுள்ளார்.