ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அலை அலையாய் தொண்டர்கள் கூட்டம் : அதிர்ச்சியில் சசிகலா அணியினர்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அலை அலையாய் தொண்டர்கள் கூட்டம் : அதிர்ச்சியில்  சசிகலா அணியினர்

புதன்கிழமை, மார்ச் 08, 2017,

சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறையிலிருந்த சசிகலா, கட்சியினரை கண்டித்ததோடு சில கட்டளைகளையும் பிறப்பித்துள்ளார். 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 9 மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் திரண்டனர்.

இதையடுத்து 9.15 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். உடனடியாக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி.பிரபாகர், மயிலை ராஜலட்சுமி மற்றும் நடிகர் மனோபாலா, தலைமை கழக பேச்சாளர்கள் சிந்தை ஆறுமுகம், டாக்டர் அழகு தமிழ்செல்வி, வக்கீல் செல்வம், டாக்டர் சுனீல், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ரெட்சன் சி.அம்பிகாபதி, ராயபுரம் அறிவழகன் சண்முகம் உள்பட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

10 மணிக்கு பிறகும் உண்ணாவிரத  பந்தலுக்கு அ.தி.மு.க.வினர் சாரை, சாரையாக வந்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் நடை பெறும் எழும்பூர் ராஜ ரத்தினம்  மைதானம் அருகே நீண்ட சாம்யானா பந்தல்  போடப்பட்டு  அதில் தொண்டர்கள் அமர்ந்தனர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே, அங்கு இடம் போதவில்லை.அதை தொடர்ந்து தொண்டர்கள் ரோட்டிலும் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் பெண்கள்  சாரை சாரையாக வந்து கலந்து கொண்டனர்.

தமிழகம், புதுச்சேரியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கேற்க அதிகளவில் கட்சியினரும், மக்களும் வந்தனர். இந்த கூட்டத்தைப் பார்த்த பன்னீர்செல்வம் அணியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்திய போராட்டத்துக்கு சென்றவர்களின் பட்டியலை சசிகலா தரப்பு தயாரித்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் சில முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் உள்ளன.  உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்காத கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் மறைமுகமாக பன்னீர்செல்வம் அணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அவர்கள் குறித்த தகவலும் கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். அவர்களிடம் விரைவில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அ.தி.மு.க.வில் பெரும்பாலானவர்களின் ஆதரவு பன்னீர்செல்வம் வசம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மாநகர உளவுப்பிரிவும், மாநில உளவுப்பிரிவும் அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம். பெண்கள் கூட்டம் கணிசமாக உள்ளதாக ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய உளவுப்பிரிவும் இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. பன்னீர்செல்வத்துக்கு பெருகிய ஆதரவை அதிர்ச்சியுடன் சசிகலா அணியினர் பார்த்து வருகின்றனர்.