கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காரணமே கருணாநிதிதான் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காரணமே கருணாநிதிதான் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

செவ்வாய்கிழமை, ஜூன் 21, 2016,

சென்னை : கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு தி.மு.க. வே காரணம். மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் தி.மு.க.வே காரணம் என்று சட்டப்பேரவையில் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இது தொடர்பாக நான்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது தி.மு.க துணையாக இருக்காதது ஏன் என்றும், உச்சநீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா உறுதிபட தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் க.பொன்முடி திங்கள்கிழமை பேசினார். அப்போது அவர், “1991-ஆம் ஆண்டில் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்டே தீருவேன் எனப் பேசினார்’ என்றார்.

அப்போது குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியது:-

கச்சத்தீவு தொடர்பான கேள்வியைக் கேட்க திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்தபோதுதான், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

1974, 1976-ஆம் ஆண்டுகளில் அப்போதைய மத்திய அரசு இதற்கான ஒப்பந்தங்களைச் செய்தபோது, அதைத் தடுப்பதற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி என்ன செய்தார். ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா ஒன்றுமேயில்லையே.

1991-இல் ஒரு மாநில அரசின் அதிகார வரம்பு எதுவரை உள்ளது என்பதை உணர்ந்து, மத்திய அரசு மூலமாக நடவடிக்கையை எடுப்பேன் என்று பேசியிருக்கிறேன். தவிர, “நான் ஒரு படையைத் திரட்டிக் கொண்டு கச்சத்தீவை மீட்பேன்’ என்று பேசவில்லை.

மறைக்க முடியாது: கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுகவும், அன்றைய முதல்வர் கருணாநிதியுமே காரணம். எத்தனை கூச்சல் போட்டாலும் மறைக்க முடியாது.

2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்குத் தொடர்ந்தபோது, மத்திய, தமிழக அரசுகளின் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நேரத்தில் கருணாநிதி, “மத்திய அரசு என்ன பதில் மனு தாக்கல் செய்கிறது என்பதைப் பார்த்து விட்டு, அதன் பிறகு தமிழக அரசு தாக்கல் செய்யலாம்’ என்றார்.

அப்போது மத்திய அரசோ, “வழக்கை தூக்கி எறிய வேண்டும். கச்சத்தீவை மீட்க முடியாது. அது முடிந்து போன பிரச்னை’ என பதில் மனு தாக்கல் செய்தது. அதே ரீதியில் தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது.

2011-இல் பேரவையில் தீர்மானம்: 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருவாய்த் துறை மூலமாக தமிழக அரசும் இந்த வழக்கில் இணைந்தது. இந்தச் செயலை திமுக ஆட்சியில் இருந்த போது ஏன் செய்யவில்லை என்றார்.

க.பொன்முடி (திமுக): 1974-இல் கச்சத்தீவு கொடுத்தபோது, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்யப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒப்புக் கொண்ட முடிவு என்றால், தாரைவார்க்கப்பட்டது என்றே அர்த்தம்.

1991-ஆம் ஆண்டு முதல் இன்று வரை அதிமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மாநில அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்ட வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடிதங்கள் மூலம் பலன் ஏற்படவில்லை என்பதால்தான், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.

மத்தியிலே இருந்தீர்கள்…: கடந்த காலங்களில் ஒரே ஒரு ஆண்டில் மட்டும்தான் அதிமுக மத்திய அரசின் அங்கம் வகித்தது. அதிமுக வைத்த கோரிக்கைகளை ஏற்கவில்லை என்பதால், மத்திய அரசின் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். ஆனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலும், பாஜக தலைமையிலான கூட்டணியிலும் திமுக அங்கம் வகித்தது.

தனது ஆலோசனையின்படியே பிரதமர் செயல்படுகிறார் என முன்னாள் முதல்வர் கருணாநிதி பெருமைப்பட்டுக் கொண்டார்.

அப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கச்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் தூங்கிவிட்டு இப்போது திடீரென விழித்துக் கொண்டு, என்னை ( ஜெயலலிதா) பார்த்து கேள்வி கேட்க திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது.

நிச்சயம் வெற்றி பெறுவேன்: 1960-ஆம் ஆண்டில், பெருபாரி என்ற பகுதியை கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவின் ஒரு பகுதியை வேறொரு நாட்டுக்கு தாரை வார்க்க வேண்டுமெனில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியல் சாசன திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.

கச்சத்தீவை தாரை வார்க்கும்போது அப்படி செய்யப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நிச்சயம் வெற்றி கிடைக்கும். கச்சத்தீவு கண்டிப்பாக மீட்கப்படும். அதை திமுகவினர் நன்றாக இருந்து பார்க்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

எது உண்மை?

மு.க.ஸ்டாலினுக்கு ஜெயலலிதா கேள்வி

கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி தெரிவித்த கருத்துகளில் எது உண்மை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

விவாதத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “கச்சத்தீவை தாரை வார்க்கும்போது தமிழக அரசை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை’ என்றார்.

இதற்குப் பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:-

கச்சத்தீவை தாரை வார்த்தபோது, சட்டப் பேரவையில் கருணாநிதி தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் பேசிய அவர், கச்சத்தீவு தொடர்பாக எந்த விதமான தகவலையும் அரசுக்கு அறிவிக்கவில்லை எனவும், பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன் எனவும் கூறியிருக்கிறார்.

அதேசமயம், 2013-இல் டெசோ அமைப்பின் கலந்துரையாடலால், கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அவர் சொல்லித்தான் சில ஷரத்துகள் சேர்க்கப்பட்டன என்கிறார். இதில், எது உண்மை என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும் என்றார்.