கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டு வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளில் தீவிரம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் விநியோகம்

கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டு வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளில் தீவிரம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் விநியோகம்

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், முழுவீச்சில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டும், நேரில் பார்வையிட்டும் துரிதப்படுத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில், மழை-வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த நிதியுதவியான, தலா 4 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 28 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர்கள் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்படி, கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய, போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மின்வாரியம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்தும், இந்த பணிகளை மேற்பார்வையிடுவது குறித்தும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்க ஏதுவாக, அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. நத்தம் இரா. விசுவநாதன், திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. எம்.சி. சம்பத், திரு. கே.ஏ. ஜெயபால், திரு.R.B. உதயகுமார் ஆகியோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மின்சார விநியோகம் சீரமைப்பு, குடிநீர் வழங்குதல், உணவு வழங்குதல், மேல்நிலைக் குடிநீர் தொட்டிகளுக்கு ஜெனரேட்டர் அமைத்து குடிநீர் ஏற்றும் பணி, அனைத்து ஊராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், மின் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வெள்ள நிவாரணப் பணிகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து தீவிரப்படுத்தினர். மேலும் இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. ககன்தீப் சிங் பேடி தலைமையில், IAS அதிகாரிகள் திரு. பாஸ்கரன், திரு ஜி. பிரகாஷ், திரு. விஜயராஜ்குமார், திரு. சாய்குமார், திரு. மகரபூஷணம், திரு. எம்.எஸ். சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் திரு. ஆபிரகாம், திரு. கே. குழந்தைசாமி உள்ளிட்டோர், கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். ஊரகப் பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்படுவதையும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், விலையில்லா வேட்டி-சேலைகள் மற்றும் அரிசி உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பொருட்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.

கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, மக்களுக்கு தேவையான தடுப்பு ஊசிகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுகாதார முகாம்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று, அங்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.

மழை வெள்ளத்தில் உயிரிழந்த கடலூரைச் சேர்ந்த அமுதா, பாஞ்சாலை, குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த அனிதா, உஷா, ஜெயா, மாணிக்கவேல், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த லட்சுமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 28 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கி ஆறுதல் கூறினர். தங்கள் மீது மிகுந்த பரிவும், அக்கறையும் கொண்டு, தாயுள்ளத்தோடு உடனடியாக நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, நிதியுதவியைப் பெற்றுக்கொண்டோர் நெஞ்சம் நெகிழ நன்றித் தெரிவித்துக்கொண்டனர்.

பரங்கிப்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தலா 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினர்.

கெடிலம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் வடலூர்-சேத்தியாதோப்பு நெடுஞ்சாலையில் மழையால் ஏற்பட்ட சாலை உடைப்பை சீரமைக்கும் பணிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ. அருண்மொழிதேவன், திரு. மா. சந்திரகாசி, சட்டடமன்ற உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ள துரித நடவடிக்கையால், மழையால் மிகவும் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.