கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ

கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ

ஆகஸ்ட் 29, 2017 ,செவ்வாய்க்கிழமை, 

மதுரை : திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ், கட்சிக்கு சசிகலாவையும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 8 அதிமுக எம்எல்ஏ-க்களும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக உள்ளனர். இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மட்டும் மேலூரில் நடந்த டிடிவி. தினகரன் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் செல்லவில்லை. அவரையும், மேலும், 2 எம்எல்ஏ-க்களையும் உள்ளூர் அமைச்சர் ஒருவர் கடத்தியதாக மேலூர் பொதுக்கூட்ட மேடையிலேயே டிடிவி. தினகரன் குற்றம் சாட்டினார். அதற்கு ஏ.கே.போஸ், தன்னை யாரும் கடத்தவில்லை என பதில் அளித்தார்.

 

இதுகுறித்து ஏ.கே.போஸ் கூறியதாவது:-

நான் எனது நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறேன். மற்றவர்கள்தான் குழம்பி போய் உள்ளனர். தற்போதைய நிலையில் ஆட்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு. கட்சிக்கு சசிகலாவுக்கு ஆதரவு. இதில் எந்த மாற்றமும் இல்லை.நேற்று முன்தினம் நான் தேனிக்குச் சென்று டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். நண்பர், துணை பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் அவரை சந்தித்து வாழ்த்தினேன்.

ஆனால், அது அவருக்கு ஆதரவு தெரிவித்தாக பரவியது. அதற்கு மறுப்பு அறிக்கை விட சொன்னார்கள். அதற்காக மறுப்பு பேட்டிக் கொடுத்தேன். நான் எடப்பாடி பழனிசாமியையும், சசிகலாவையும் நேசிக்கிறேன்.எங்கள் கட்சியிலேயே சில புல்லுருவிகள் உள்ளனர். அவர்கள் என் மீது தவறான விமர்சனங்களை பரப்புகின்றனர். என்னால் நடக்க முடியவில்லை. அறுவைச் சிகிச்சை செய்ய உள்ளேன்.

அதனால், டிடிவி. தினகரன் அறிவித்த பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. அது அவருக்கே தெரியும். அறுவை சிகிச்சை முடிந்ததும் திடகாத்திரமாகி விடுவேன். அதன்பிறகு கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவேன் என்று கூறினார்.