கட்டணமின்றி சான்றிதழ் மற்றும் ஆவணங்களின் நகல்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்களும், மாணவிகளும் நன்றி

கட்டணமின்றி சான்றிதழ் மற்றும் ஆவணங்களின் நகல்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்களும், மாணவிகளும் நன்றி

திங்கள் , டிசம்பர் 14,2015,

எவ்வித கட்டணமின்றி, சிரமமில்லாமல் சான்றிதழ் மற்றும் ஆவணங்களின் நகல்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்களும், மாணவிகளும் நன்றி தெரிவித்து கொண்டனர்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க, கனமழை வெள்ளம் காரணமாக சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்தவர்களுக்கு, கட்டணமில்லாமல் அவற்றின் நகல்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று தொடங்கின. வரும் 28-ம்தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

சென்னையில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக வீட்டுமனைப்பட்டா, கல்வி சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலம் மற்றும் வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பலர் இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு நகல் ஆவணங்களை வழங்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

தண்டையார்பேட்டை வட்டத்தில் எண் 473, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அப்பல்லோ மருத்துவமனை அருகிலும், புரசைவாக்கம் வட்டத்தில் எண் 3, ராஜா முத்தையா சாலை, நேரு ஸ்டேடியம் அருகிலும், பெரம்பூர் வட்டத்தில் எண் 3, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் ரயில் நிலையம் அருகிலும், அயனாவரம் வட்டத்தில் எண் 25, யுனைடெட் இந்தியா காலனி முதல் மெயின் ரோடு என்ற முகவரியிலும், எழும்பூர் வட்டத்தில் எண் 88, மேயர் ராமநாதன் சாலை சேத்துபட்டு முகவரியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இதேபோல், அமைந்தகரை வட்டத்தில் எண் 4, மேற்கு மாடவீதி, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் அருகிலும், மாம்பலம் வட்டத்தில் எண் 1, பாரதிதாசன் காலனி, கே.கே.நகர், கிண்டி வட்டத்தில் எண் 370, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் வட்டத்தில் எண் 28, பசும்பொன் முத்துராமலிங்க சாலை, ராஜா அண்ணாமலைபுரம், வேளச்சேரி வட்டத்தில், IRT வளாகம், 100 அடி சாலை, தரமணி என்ற முகவரியிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

முதல் நாளான இன்று சென்னை தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமினை அமைச்சர்கள் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், திருமதி. பா. வளர்மதி, திரு. செல்லூர் கே. ராஜு, திருமதி. எஸ். கோகுல இந்திரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் அளித்தமைக்கான ஒப்புகை சீட்டுகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், சென்னை மேயர் திரு. சைதை துரைசாமி, மாவட்ட ஆட்சியர் திருமதி. எ. சுந்தரவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு அமைச்சர் திரு.P.பழனியப்பன் புத்தகங்களை வழங்கியதோடு, நகல் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவங்களையும் வழங்கினார்.

மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. சுந்தரவல்லி பார்வையிட்டார். மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் திரு.K.C. வீரமணி, கட்டணமின்றி நகல் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திருமதி சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எவ்வித கட்டணமின்றி, சிரமமில்லாமல் சான்றிதழ் மற்றும் ஆவணங்களின் நகல்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்களும், மாணவிகளும் நன்றி தெரிவித்து கொண்டனர். சிறப்பு முகாம்களில், தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒருவார காலத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.