கட்டணமில்லா பஸ் பயணச் சலுகைகள் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மூத்த குடிமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

கட்டணமில்லா பஸ் பயணச் சலுகைகள் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மூத்த குடிமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், பெப்ரவரி 23,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள, சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் புதிய சலுகைத் திட்டம் நாளை முதல் செயல்பாட்டிற்கு வருவதையொட்டி, பேருந்துகளில் பயணம் செய்வதற்கான டோக்கன்களை முதியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

அரசுப் பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வகை செய்யும் புதிய திட்டம் ஒன்றை, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். முதற்கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், நாளை முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பின்னர் பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இத்திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, கடந்த 20-ம் தேதி, 5 மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் டோக்கன்கள் மற்றும் பேருந்து பயண அட்டைகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விழைவோர், அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தை இணைத்து, அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான அடையாள அட்டை மற்றும் டோக்கன் பெற்றுக்கொள்வதில் முதியோர்கள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர். வயதான காலத்தில் மருத்துவமனை, கோயில் போன்ற இடங்களுக்கு சென்றுவர ஏதுவாக, கட்டணமில்லா பஸ் பயணச் சலுகைகள் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.