கட்டுமான தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கட்டுமான தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

பணியில் இருக்கும் போது விபத்தில்  இறக்கும்  கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ 5 லட்சம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடங்களில் விபத்து ஏற்பட்டு இறக்கும் போது அவர்களுக்கான நிதி உதவி ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று  முதலமைச்சர்  ஜெயலலிதா  12.8.2014 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில், கட்டுமானப் பணியின் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி குமாரின்  மனைவி கே.பானுமதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மிக்கேல் ஜஸ்டின் என்பவரின் மனைவி சகாய வினிஸ்டாள் ஆகியோருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான விபத்து மரண உதவித் தொகைக்கான காசோலையை முதலமைச்சர்  ஜெயலலிதா வழங்கி, உயர்த்தப்பட்ட விபத்து மரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.

மேலும், பெரம்பலூரில் 1 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் முதல் தளத்துடன், 5,400 சதுர அடி கட்டட பரப்பளவில், கூட்டரங்கம், உற்பத்தி பொருட்காட்சி மையம், அலுவலர் அறைகள், கணினி அறை, பயிற்சி அறை, உள்ளிட்ட வசதிகளுடன்

கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகக் கட்டடம், அரியலூர் மாவட்ட தொழில் மையக் கட்டடம் மற்றும் சென்னை – கிண்டி, மண்டல இணை இயக்குநர் அலுவலகம் ஆகிய இடங்களில் 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள்; திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள், மாநிலத்தில் தொழிற் கூட்டுறவு சங்கங்கள், குறு மற்றும் சிறு தொழில்களுக்கு கடன் வசதிகள் வழங்கும்பொருட்டு தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் (தாய்கோ வங்கி) சாத்தூர் மற்றும் அம்பத்தூர் கிளைகளுக்காக 78 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வங்கிக் கட்டடங்கள், சென்னைப் பெருநகரை ஒட்டியுள்ள பகுதிகளில், நிலத்தின் விலை அதிகமாக உயர்ந்து வருவதாலும், தொழிற் பேட்டைகள் துவங்க போதுமான காலி இடங்கள் இல்லாததாலும், தற்போதுள்ள தொழிற் பேட்டைகளை விரிவுபடுத்த போதிய இடம் இல்லாததாலும், சிறு தொழில் முனைவோர், தொழிற் கூடங்களை அமைக்க உதவும் வகையில், அடுக்கு மாடி தொழில் வளாகங்களை அமைத்துத்தர அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் சிறு தொழில் முனைவோருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில்  குறுந்தொழில் கூடங்களை ஒதுக்கும் பொருட்டு 20 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் ஒன்று சிட்கோ நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும் என்று 7.5.2013 அன்று  முதலமைச்சர் ஜெயலலிதா   சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ள சிட்கோ தொழிற் பேட்டையில் 1.788 ஏக்கர் நிலத்தில், 1,20,640 சதுர அடி கட்டட பரப்பளவில், நான்கு தளங்களுடன், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 79 தொழிற்கூடங்களுடன், சுற்றுச்சுவர், மழை நீர் சேகரிப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிவு நீர் வடிகால் வசதி, மின் வசதி, சுற்றுப்புற சாலை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி தொழில் வளாகம், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை சிட்கோ தொழிற் பேட்டையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிட்கோ கிளை அலுவலகக் கட்டடம், திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் தொழிற்பேட்டையில் 1.22 ஏக்கர் நிலத்தில், 1,586 சதுர அடி கட்டடப் பரப்பளவில், 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது வசதி மையக் கட்டடம், சிட்கோவின் செயல்பாடுகளை அனைத்து மாவட்டங்களிலும் துரிதப்படுத்தவும், தொழில் முனைவோரின் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யவும், தொழில் மயமாக்கலை விரைவுபடுத்தவும் அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தேனி, நீலகிரி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிட்கோவின் கிளை அலுவலகங்கள், என மொத்தம் 30 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை  முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அமைச்சர் மோகன் – அதிகாரிகள் பங்கேற்பு ஊரகத் தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  ப.மோகன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்  ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு  சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர்ஜே.சி.டி. பிரபாகரன், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் அம்புஜ் ஷர்மா, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர். ஜக்மோகன் சிங் ராஜூ,  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் .குமார் ஜயந்த்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர்  சி. சமயமூர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.