கனமழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கனமழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , டிசம்பர் 28,2015,

சென்னை,கனமழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கனமழை காரணமாக 4.12.2015 அன்று திருநெல்வேலி மாவட்டம், ராயகிரி பகுதியைச் சேர்ந்த மாடன் என்பவரின் மகன் சிவன்பாண்டியன்; சென்னை, பள்ளிக்கரனை பகுதியைச் சேர்ந்த மருதநாயகம் மற்றும் அவரது மனைவி நிர்மலா புஷ்பம்; 5.12.2015 அன்று செய்யார் வட்டம், திருவத்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த காங்கன் என்பவரின் மகன் சந்தானம்; 6.12.2015 அன்று செய்யார் வட்டம், விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளை என்பவரின் மகன் அருண்குமார்; காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், செம்மஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவரின் மனைவி நளினி; ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; 5.12.2015 அன்று திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், முக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மொட்டை என்பவரின் மகன் கண்ணன்; 6.12.2015 அன்று கெங்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த நன்னி என்பவரின் மகன் சின்னசாமி; 8.12.2015 அன்று திருநெல்வேலி மாவட்டம், ஆவுடையனூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் மாரிச்செல்வன் ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.