கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்

கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்

திங்கள் , டிசம்பர் 07,2015,

கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நிவாரண முகாம்களில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் இரவு, பகலாக அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலூர், செம்மண்டலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை அமைச்சர்கள் திரு. எம்.சி. சம்பத், திரு. R.B. உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கல்குணம், பூதாம்பாடி, மருவாய், வாலாஜா ஏரி உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் திரு. R.B. உதயகுமார், நிவாரண ஒருங்கிணைப்பு அதிகாரி திரு. ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் குடிசை வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்து 161 குடும்பங்களுக்கு, முதலமைச்சர் அறிவித்த நிவாரண தொகையான தலா 4,100 ரூபாய், அரிசி, வேட்டி, சேலை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை அமைச்சர் திரு. ப. மோகன் வழங்கினார். டாக்டர் லட்சுமணன் எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், அரிசி மற்றும் வேட்டி சேலைகளை அமைச்சர் திரு. எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட மழையால் பாதித்த பகுதிகளை நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை நேரில் பார்வையிட்டார். கரூர், திருமாநிலையூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர் திரு. ஆர். காமராஜ், கால்நடை மருத்துவ முகாமையும் ஆய்வு செய்ததுடன், சம்பா பயிர்களின் நிலை குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மழையால் வீடுகள் சேதமடைந்தும், கால்நடைகள் உயிரிழந்ததாலும், பாதிக்கப்பட்ட 60 பேருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவித்தொகைகளை அமைச்சர் வழங்கினார். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் பாப்பாகோயில், நாகூர், செல்லூர், திருமருகள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் பார்வையிட்டு துரிதப்படுத்தினார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தியாகராஜபுரம், சூரியாநகர் பகுதி பொதுமக்களை, அமைச்சர் சந்தித்து உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

மயிலாடுதுறையை அடுத்த அறுபத்துமூவர் பேட்டை பகுதியில் வீடுகளை இழந்த 15 பேருக்கு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை, கீழப்பெரம்பலூர், அத்தியூர் உள்ளிட்ட 20 கிராமங்களில், வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட 90 குடும்பத்தினருக்கு, நிவாரண நிதியுதவி, அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள கேடாலி கருப்பூர் கிராம மக்களுக்கு, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன், நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.