கனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ரூ.72 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ரூ.72 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

புதன், டிசம்பர் 09,2015,

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, வெள்ளநீரில் மூழ்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 72 லட்சம் ரூபாய் நிதியுதவி உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, பெய்த கனமழையினால், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏழுமலை மகன் ராஜேஷ்குமார், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், காரிசாத்தான் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரிமுத்து மகன் சிவா; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், நெடிமொழியனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. பச்சையப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து, தாம் மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி வட்டம், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த திரு. காசி மகன் முனுசாமி; மாம்பலம் வட்டம், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் மகன் மூர்த்தி; மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த திரு. ராஜேந்திரன் மகன் ராஜபரத்; வேளச்சேரி வட்டம், திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த திரு. வாலியின் மகன் ராஜேந்திரன், கிண்டி வட்டம், தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்த திரு. துரையரசு மனைவி கனகா; மாம்பலம் வட்டம், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த திரு. பாஸ்கர் மனைவி சித்ரா,சென்னை, வேளச்சேரி வட்டம், திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த திரு. ராஜ்குமார் மகன் கரண்,சென்னை, கிண்டி வட்டம், தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த திரு. வடிவேல் மனைவி ஆண்டாள் ஆகியோர் கனமழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து, தாம் மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமச்சந்திரன் மகன் ஸ்ரீதர் என்கிற மணிகண்டன்; திரு. மதியழகன் மகன் வெங்கடேசன் ஆகிய இருவரும் வேலூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. கோலியனூரான் மனைவி அஞ்சுலட்சுமி,கீழ்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கணேசனின் மகன் வீரப்பா,தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மருதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சாமிநாதன் மனைவி ராமாயி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரமடைந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டம், ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சோமையா மகன் பால்பாண்டியன், மழை காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவண்ணாமலை மாவட்டம், குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் மகன் மொட்டை, ஏரி தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.