கனவுகள் நனவாகிடவே கைதூக்கி நிற்க வைத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

கனவுகள் நனவாகிடவே கைதூக்கி நிற்க வைத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

திங்கள் , பெப்ரவரி 01,2016,

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான அற்புதத் திட்டமான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 16.01.2012 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் 1 கோடியே 34 இலட்சம் குடும்பங்கள் இலவச மருத்துவ சேவையைப் பெற்று பயனடைகின்றனர்.

மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள தொலைதூர பகுதிகளில் வாழும் ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தித் தர தற்போது உள்ள 395 நடமாடும் மருத்துவக்குழுக்களை மேம்படுத்தி ஆய்வக வசதிகளுடன் கூடிய 395 சிறப்பான நடமாடும் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மூலமாக 135 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து, நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு நல்வாழ்வு சேவைகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி செலவில் பிறவிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டம் தமிழகம் முழுமையிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி திரு.விக்னேஷ் என்பவர் கூறியதாவது:-

“என் பெயர் விக்னேஷ். எனக்கு 17 வயதாகிறது. நான் புதுக்கோட்டை வட்டம் கூழையான்விடுதி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தை விவசாய கூலி வேலை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தவே கஷ்டமாக இருக்கும் சூழ்நிலையிலும் என்னை பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க வைத்து வருகிறார். அதனால் நன்றாகப் படித்து என்னுடைய குடும்பப் பொறுப்பை சுமந்து எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது கனவாக இருந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் எனக்கு வயிற்றுவலி ஏற்பட்டு, மிகுந்த வேதனை அடைந்து பள்ளியிலிருந்து பாதியிலேயே வீட்டிற்கு திரும்பி வந்தேன். பின்னர், எனது தந்தை என்னை மா.மலர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றார். அப்பொழுது மருத்துவர் எனக்கு குடல் வால்வு தொற்று நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும், என்னுடைய தந்தையிடம் கூறினார்கள். எங்கள் குடும்பத்தை வாட்டியது வறுமை. நான் நோயால் வாடினேன். எனது தந்தை இந்த சூழ்நிலையில் எப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும் அதிக பணம் செலவாகுமே என்று வருத்தப்பட்டார். அதற்கு மருத்துவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியாதா? என்று எனது தந்தையிடம் கேட்டார். பின்னர் மருத்துவர் உங்களுடைய மருத்துவக் குறிப்புடன் புதுக்கோட்டையில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார். பிறகு, மருத்துவ முகாமில் கலந்து கொண்ட என்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரை செய்து எனக்கு 04.05.2014 அன்று குடல் வால்வு தொற்று அறுவை சிகிச்சை நடைபெற்று இப்பொழுது நான் நலமாக உள்ளேன்.

என் கனவுகள் யாவும் பொடிப்பொடியாய்த் தகர்ந்து போய்விடுமோ என்று பயந்த நேரத்தில், என்னை கைதூக்கி நிற்க வைத்து என்னைப் போன்ற பணவசதி கொஞ்சமும் இல்லாத ஏழை, எளியவர்கள் எவ்வித செலவுமின்றி, உடல்நலம் பெற்றிடும் வகையில் மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை தந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.