கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 147 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 147 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

21 November 2015

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் 31 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், தேனி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், 116 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்திய பொருளாதாரத்தில் தனித்தன்மை பெற்று விளங்குவதும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு கணிசமான வருவாயினை பெற்றுத் தருவதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற ஜவுளித் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நெசவாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு நலத் திட்டங்களையும், நூற்பாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது போன்ற திட்டங்களையும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில், ஆலைக் கட்டடங்களை புனரமைத்தல், புதிய மின்சாதனங்கள், நவீன இயந்திரங்கள், சமச்சீர் சீதோஷ்ண நிலை அமைப்பு, கழிவுப் பஞ்சு அகற்றும் தானியங்கி கருவி உள்ளிட்ட வசதிகளுடன் 31 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட நூற்பாலையை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியிலுள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை 30 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலும்; தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்திலுள்ள பாரதி கூட்டுறவு நூற்பாலை 26 கோடியே 90 லட்சத்து ஓராயிரம் ரூபாய் செலவிலும்; புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 30 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவிலும்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 28 கோடியே 39 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிலும் என மொத்தம் 147 கோடியே 21 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் ஐந்து நவீனமயமாக்கப்பட்ட நூற்பாலைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேற்கண்ட நூற்பாலைகள் நவீனமயமாக்கப்பட்டு புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதால், நெசவுத் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நூல் உற்பத்தி திறன் கணிசமாக அதிகரிக்கும் – மேலும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான தரமான நூல்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடிவதுடன், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம், விலையில்லா பள்ளிச் சீருடைகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கான நூல் தேவையினை அதிக அளவில் பூர்த்தி செய்ய இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ். கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஹர்மந்தர் சிங், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் திருமதி க. லதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.