கன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

21-11-2015

சென்னை,

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 10 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதல்-அமைச்சர்ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீரில் மூழ்கி உயிர் இழப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், சமத்துவ பெரியார் நகரைச் சேர்ந்த தர்மையா என்பவரின் மகன் பீமைய்யா மற்றும் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த வேலு என்கிற சக்திவேலு, காஞ்சீபுரம் வட்டம், தாட்டிதோப்பு கிராமத்தை சேர்ந்த திரு பாஸ்கர் என்பவரின் மகன் சத்யா; சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டத்தைச் சேர்ந்த, திரு ஹயாத் பாஷா என்பவரின் மகன் முகமது ஆசிப்; அமைந்தகரை வட்டம், பெரியகூடல் கிராமத்தைச் சேர்ந்த எத்திராஜ் என்கிற ராஜன் ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மின் கசிவால் உயிர் இழப்பு

சென்னை மாவட்டம், அயனாவரம் வட்டம், கொளத்தூரைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் இந்துமதி; சென்னை மாவட்டம், சூளையைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் வசந்தகுமார் ஆகியோர் மழையின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், முட்டாஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்துல்வாத் என்பவரின் மகன் பசீர் அகமது கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த 9 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. நிர்வாகி

ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டம், நாராணம்மாள்புரம் குறுவட்டம், தச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த மந்திரம் பிள்ளை என்பவரின் மகன் கணேசன் கடந்த 18-ந் தேதி நெல்லையப்பர் கோவில் அருகே மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டதில் மயக்கமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த கணேசன் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கணேசன் அ.தி.மு.க. நிர்வாகியாக இருந்ததால் கட்சி சார்பிலும் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.