கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜாவின் மகள் உட்பட 10 பேருக்கு தேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில் போலீஸ் வலை வீச்சு!

கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜாவின் மகள் உட்பட 10 பேருக்கு தேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில் போலீஸ் வலை வீச்சு!

திங்கள் , பெப்ரவரி 15,2016,

புதுடில்லி:டில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில், தேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில், மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் உட்பட, 10 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்; அவர்கள் வெளிநாடு தப்பிவிடாமல் இருக்க, விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2001ல், பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட அப்சல் குரு, 2013 பிப்ரவரியில், டில்லி, திஹார் சிறையில் துாக்கிலிடப்பட்டான்.

இந்நிலையில், அப்சல் குரு நினைவு தினத்தையொட்டி, டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலையில், மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சியில், தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக, ‘வீடியோ’ வெளியானது.இதைத் தொடர்ந்து, பல்கலையின் மாணவர் சங்கத் தலைவரான, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த கன்னையா குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, கோஷமிட்டதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்த, எம்.பி.,யுமான டி.ராஜாவின் மகள் அபராஜிதா உட்பட, 10 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.டில்லி, மேற்கு வங்கம், பீஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில், போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள், வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால், விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.