கரும்பு டன்னுக்கு ரூ.550 உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:விவசாயிகள் மகிழ்ச்சி

கரும்பு டன்னுக்கு ரூ.550 உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாய், ஜனவரி 12,2016,

கரும்பு டன்னுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2,300 உடன், ரூ.550 சேர்த்து ரூ.2,850 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயம் செய்யும் நியாயமான, ஆதாய விலையைவிட உயர் அளவில் பரிந்துரை விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்துவருகிறது. இந்த நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான கரும்பு பருவத்துக்கு டன்னுக்கு ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு ரூ.100 உள்பட ரூ.550-ஐ உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதனால் விவசாயிகளுக்கு நடப்பு கரும்புப் பருவத்தில் டன்னுக்கு ரூ.2,850 கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கரும்பு மகசூல் திறனில் முதலிடத்தில் தமிழகம்: கரும்பு மகசூல் திறனில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரும்பு உற்பத்தித் திறனை அதிகரித்து, கரும்பு உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும், சர்க்கரை ஆலைகள் முழு அரைவைத் திறனை அடையும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நிழல்வலைக் கூடத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்தல், பாசன நீர், உரங்களை திறனுடன் பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனத்தின் மூலம் உரமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட நீடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணீர் பாசன உபகரணங்களுக்கென சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.