கலை உலகம் நன்றாக இருக்கவும், தமிழக மக்கள் நலமாக இருக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா சீக்கிரம் வர வேண்டும் ; நடிகர் பிரபு

கலை உலகம் நன்றாக இருக்கவும், தமிழக மக்கள் நலமாக இருக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா சீக்கிரம் வர வேண்டும் ; நடிகர் பிரபு

திங்கள் , நவம்பர் 07,2016,

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில்,முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக, நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதவதி, அவர்களது மகன் விக்ரம் பிரபு, அவரது மனைவி உஜ்ஜைனி, நடிகர் கிட்டு ஆகியோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

உள்ளே சென்ற அவர்கள், அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் டாக்டர்களிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்தனர்.

அப்போது, நடிகர் பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் நலமாக இருக்கிறார்.முதலமைச்சர் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் சிறப்பு வார்டில் இருந்து தனி வார்டுக்கு அவர் வந்துவிடுவார்.முதலமைச்சர் ஜெயலலிதா விரைவான குணமடைய தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் பிரார்த்தனை தான் காரணம். அதனால், பூரண குணமடைந்து விரைவில் வீட்டிற்கு திரும்பி விடுவார், கோட்டைக்கும் வருவார் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள் எங்கள் குடும்பத்தில் இருந்து இவ்வளவு நாட்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரிக்கவில்லை என்றாலும், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து கொண்டுதான் இருந்தோம். ஜெயலலிதா மிகவும் நன்றாக குணமாகிவிட்டார். ஆகையால், மக்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம்.முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையை டாக்டர்கள் தந்திருக்கின்றனர்.முதலமைச்சர் ஜெயலலிதா மீது என்னுடைய தந்தை (சிவாஜி கணேசன்) ரொம்ப பிரியமாக இருப்பார். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ஆண்டவனையும், அப்பாவையும் வேண்டுகிறோம்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து பேசினேன். இன்னும் 2 நாட்களில் அனைவரும் பார்க்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா இருப்பார். கலை உலகம் நன்றாக இருக்கவும், தமிழக மக்கள் நலமாக இருக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா சீக்கிரம் வர வேண்டும். அவருடைய உடல்நிலை குறித்து டாக்டர்கள், கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. அந்த அளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்.விரைவில் நன்றாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வருவார்.  இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.