கல்வித் திட்டத்திற்கான நிதியை குறைக்காதீங்க:75 சதவீதம் அதிகரிக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

கல்வித் திட்டத்திற்கான நிதியை குறைக்காதீங்க:75 சதவீதம் அதிகரிக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி யை மேலும் குறைக்க்கூடாது என்றும் ,. இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, குறைந்தபட்சம் 75 சதவீத நிதியை இந்திய அரசு வழங்குமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

      கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:‘சர்வசிக் ஷா அபியான்’ எனப்படும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியுதவி, ஏற்கனவே, 65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் குறைக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது.
கடந்த, 2015 – 16க்கான, சர்வசிக் ஷா அபியான் திட்ட அனுமதி வாரியத்தின், 216வது கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதிப்பகிர்வு, 65க்கு, 35 என்ற விகிதாச்சார அடிப்படையில், 2,329 கோடி ரூபாய் ஒதுக்கீட்டை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகரித்தது. ‘திட்டத்திற்கான செலவில், 35 சதவீதத்தை, தமிழக அரசு ஏற்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று, தமிழக அரசின் பட்ஜெட்டில், உரிய ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட திட்டம், ஏப்ரல் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மே, 15ம் தேதி, இடைக்கால ஒதுக்கீடாக, 389 கோடி ரூபாயை விடுவித்தது.

இந்நிலையில், செப்டம்பர், 14ல், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில், ’65 சதவீதத்திற்கும் பதிலாக, மொத்த ஒதுக்கீட்டில், மத்திய அரசின் பங்காக, இனி, 50 சதவீதம் மட்டும் வழங்கப்படும்’ என, தெரிவித்துள்ளது.சர்வசிக் ஷா அபியான் திட்டத்திற்கு, மத்திய அரசின் பங்கை குறைப்பது நியாயமற்றது. 14வது நிதி கமிஷன் பரிந்துரையால், ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாயை இழக்கும் நிலை, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, பிரதமர் உடனடியாக தலையிட்டு, சர்வசிக் ஷா அபியான் திட்ட நிதியில், 75 சதவீதத்தை, மத்திய அரசு வழங்கும் வகையில் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.