காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டிய சோனியா!

காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டிய சோனியா!

வியாழன் , மார்ச் 17,2016,

செயல் திறனற்ற “தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு’ என்று சொல்ல நினைத்து வாய்தவறி செயல்திறனற்ற “ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்தார்.
அவரது வார்த்தைப் பிறழ்வைக் கண்ட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலங்கானா பிரிந்து சென்றதால் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்று அந்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது சோனியா காந்தி பேசியதாவது:
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் நீங்கள் திட்டமிட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், அவர் உங்களைச் சந்திப்பதற்கே பயப்படுவது போல் தோன்றுகிறது.
இந்த அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் நாம் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. யுபிஏ அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் அவர்.
என்டிஏ அரசாங்கம் என்று சொல்வதற்குப் பதிலாக யுபிஏ அரசாங்கம் என்று சோனியா குறிப்பிட்டுப் பேசியதால் தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.