காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் : தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் :  தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு

வெள்ளி, மார்ச் 11,2016,

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளபோதிலும்,  தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி தாம் விரும்பும் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது, தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த கே.சி.பழனிசாமி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மற்ற 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே அரவக்குறிச்சி தொகுதியில் நான் தான் போட்டியிடப்போகிறேன். எனக்கு ஆதரவு தாருங்கள் என்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார்.கடந்த சில நாட்களாக நமது வேட்பாளரை நாமே தேர்ந்து எடுப்போம் என்று கூறிக்கொண்டு அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை பகிரங்கமாக தொடங்கி உள்ளார்.இது அங்குள்ள தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அக்கூட்டணியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்குள் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் தலையெடுத்து வருவதால், தேர்தல் வரை கூட்டணி நீடிக்குமா என அரசியல் பார்வையாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.