காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், டிசம்பர் 22,2015,

கோயம்புத்தூர் மாவட்டத்தில், காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், சிறுகுன்றா மேல் பிரிவு பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ், நேற்று முன்தினம், தனது வீட்டினருகே காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த ஜேம்ஸ் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்த ஜேம்ஸின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.