காந்தியடிகளின் 70-வது நினைவு தினம் ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

காந்தியடிகளின் 70-வது நினைவு தினம் ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 31, 2017,

சென்னை ; மகாத்மா காந்தி அடிகளின் 70-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. சென்னை கோட்டையில் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ள வசதியாக சட்டசபை 10.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு கோட்டையில் உள்ள ராணுவ மைதானத்தில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைக்கு பெரிய ரோஜா மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு வந்து காந்தி சிலைக்கு ரோஜா மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் உட்பட அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் பின்னர் அங்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை படித்தார். அவர் உறுதிமொழியை படிக்க அங்கிருந்த சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் திருப்பி சொல்லி அந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படித்த உறுதிமொழி :– இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்–குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தொிந்தோ, தொியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நோ்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன்.

இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி படித்தார். இதன் பின்னர் 11.15 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடியது.