தரச் சான்று பெற்ற ‘அம்மா சீட்ஸ்’ விதைகள் விநியோக திட்டம்முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து,வீட்டு மாடிகளில் காய்கறி வளர்க்கும் “நீங்களே செய்து பாருங்கள்” தளைகளையும் வழங்கினார்

தரச் சான்று பெற்ற ‘அம்மா சீட்ஸ்’ விதைகள் விநியோக திட்டம்முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து,வீட்டு மாடிகளில் காய்கறி வளர்க்கும் “நீங்களே செய்து பாருங்கள்” தளைகளையும் வழங்கினார்

சனி, ஜனவரி 02,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டையில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், 11,322 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள உழவர் மையத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நவீன சேமிப்புக் கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், உழவர் மையங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்ததுடன், சான்றுபெற்ற விதைகள் விநியோகத் திட்டத்தை துவக்கி வைத்தார். அத்துடன், திருச்சி, மதுரை மாநகரங்களில் வீட்டு மாடிகளில் காய்கறி வளர்க்கும் “நீங்களே செய்து பாருங்கள்” தளைகளை வழங்கினார்.

விவசாயிகளின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, தமிழக வேளாண் உற்பத்தித் திறனில் உள்ள இடைவெளியை உரிய பண்ணை அணுகுமுறை மூலம் குறைத்து, உணவுப் பயிர்கள் உற்பத்தியை பெருக்குவதற்கும், வேளாண் விளைபொருட்களின் அறுவடைக்கு பின், பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்தி, சந்தை இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச்செய்து, அவர்களின் வருமானத்தை பல மடங்காக உயர்த்தி, தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டம் – தேரூரில் ஆயிரம் மெட்ரிக் டன் மற்றும் குலசேகரத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுடன் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சேமிப்புக் கிடங்குகள்; இராமநாதபுரம் மாவட்டம் – முதுகுளத்தூரில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; தஞ்சாவூர் மாவட்டம் – திருவையாறில் 1 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாழை பழுக்க வைக்கும் கூடம்; ஈரோடு மாவட்டம் – கருமாண்டிசெல்லிபாளையத்தில் 6 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் வணிக வளாகம், கோபிசெட்டிபாளையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காய்கறி மற்றும் பழங்களுக்கான குளிர்பதனக் கிடங்கு; சேலம் மாவட்டம் – வாழப்பாடியில் 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு; ஈரோடு மாவட்டம் – அவல் பூந்துறை, திண்டுக்கல் மாவட்டம் – பழனி ஆகிய இடங்களில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முன் பதப்படுத்தும் கூடம்;

காஞ்சிபுரம் மாவட்டம் – மதுராந்தகம், தூத்துக்குடி மாவட்டம் – தூத்துக்குடி ஆகிய இடங்களில் 2 கோடியே 99 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உழவர் மையங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம் – பஞ்சுப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் – வானூர், இருவேல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் – கிள்ளிகுளம், சேலம் மாவட்டம் – மகுடஞ்சாவடி, கரூர் மாவட்டம் – இனுங்கூர், தஞ்சாவூர் மாவட்டம் – காட்டுத்தோட்டம் ஆகிய இடங்களில் 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்; விழுப்புரம் மாவட்டம் – சங்கராபுரம், சிவகங்கை மாவட்டம் – எஸ். புதூர் ஆகிய இடங்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்பு கிடங்குகள்;

தஞ்சாவூர் மாவட்டம் – மருதநல்லூர் மற்றும் பட்டுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் – கரையிருப்பு, கன்னியாகுமரி மாவட்டம் – திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விதை சுத்திகரிப்பு நிலையங்கள்; தஞ்சாவூர் மாவட்டம் – பெருமகளூர், சேலம் மாவட்டம் – தலைவாசல் ஆகிய இடங்களில் 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – காஜாமலையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கக உர சேமிப்பு கூடம்;

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், ஈரோடு மற்றும் தருமபுரியில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தோட்டக்கலை விரிவாக்கம் மற்றும் பயிற்சி மையக் கட்டடங்கள்; என மொத்தம் 28 கோடியே 51 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், தமிழக விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை அதிகளவில் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு விதைப் பண்ணைகள், விதை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து, உரிய பணியாளர்களை நியமித்து, தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை ஏற்படுத்தப்பட்டு, அங்கு உற்பத்தி செய்யப்படும் தரமான, சான்று பெற்ற விதைகள் ‘அம்மா Seeds’ என்ற பெயரில் “அம்மா சேவை மையம்” விற்பனை வாயில்கள் மூலம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, தரமான, சான்று பெற்ற ‘அம்மா Seeds’ விதைகள் “அம்மா சேவை மையம்” விற்பனை வாயில்கள் மூலம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதலமைச்சர் ஜெயலலிதா 3 விவசாயிகளுக்கு ‘அம்மா Seeds’ வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள மாநகர மக்களுக்குத் தேவையான சத்தான காய்கறிகளை அவர்களே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில், காய்கறி சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அடங்கிய “நீங்களே செய்து பாருங்கள்” தளைகள் நகர்ப்புற மக்களுக்கு விநியோகிக்கும் திட்டம் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நகர்ப்புற மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளதால், நடப்பு ஆண்டு முதல் இத்திட்டத்தினை திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாநகரங்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில், 5 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் ஜெயலலிதா 2 பயனாளிகளுக்கு ‘நீங்களே செய்து பாருங்கள்’ தளைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், வேளாண்மைத் துறைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் முனைவர் ச. விஜயகுமார், வேளாண்மைத் துறை இயக்குநர் முனைவர் மு. ராஜேந்திரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் திரு. லி. சித்ரசேனன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.