காய்ச்சல்- தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

காய்ச்சல்- தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

புதன், டிசம்பர் 23,2015,

சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி,காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, தமிழகத்தில் மழையின் காரணமாக தொற்று நோய் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த சுகாதாரத்துறை அலுவலர்களின் ஆலோசனைக்கூட்டம் நேற்று ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர். க. குழந்தைசாமி, மருத்துவக்கல்வி துறை இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் டாக்டர். மணி, மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தற்பொழுது மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் இனிவரும் காலங்களில் காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளவும் ஏற்கனவே எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தவும் கீழ்க்கண்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

1. காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து உடனடியாக அழிக்கவும் மற்றும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி தீவிரமாகவும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

2. பொது இடங்களில் கொசுப்பெருக்கத்தை குறைத்து அதன் மூலம் பரவும் காய்ச்சலை தடுக்கும் வகையில் வீடுகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ளுதல், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களில் கொசுக்கள் நுழையா வண்ணம் மூடிவைத்தல் மற்றும் குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

3. பூச்சியியல் கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

4. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை வழங்க ஆங்காங்கே நடமாடும் மருத்துவ முகாம்கள் போதிய அளவு நடத்தப்பட வேண்டும்.

5. முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின் பேரில் பாரம்பரிய இந்திய மருத்துவ முறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை ஏற்கனவே அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் போதுமான அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் தீவிரமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

6. அனைத்து வகையான காய்ச்சலுக்கு தேவையான மாத்திரை மருந்துகள் போதுமான அளவில் ஏற்கனவே இருப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும்.

7. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மேலும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு போலி மருத்துவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரை சீட்டின்றி மருந்து கடைகளில் மருந்துகள் விற்பதை தீவிரமாக கண்காணித்து தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

8. மேலும் பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.