கால்நடை-பால்வளத்துறைக்கு புதிய கட்டடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

கால்நடை-பால்வளத்துறைக்கு புதிய கட்டடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016,

கால்நடை-பால்வளத் துறையின் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்தக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்தார்.

இது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

அரியலூர், கோவை, தருமபுரி, கரூர், நாகப்பட்டினம், ஈரோடு, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 162 கால்நடை மருந்தகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம்-சிவகங்கையில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டடங்கள், விருதுநகரில் கால்நடை பெருக்கம், தீவன அபிவிருத்தி நிலைய கட்டடம், குறுகிய காலத்தில் விரைவாக வளரக் கூடிய பண்ணை திலேப்பியா மீன்குஞ்சுகள் பொரிப்பகம் ஆகியவற்றைத் திறந்தார்.

ஐஸ்கிரீம்-பாலாடைக் கட்டி தயாரிப்பு ஆலை: சென்னை அம்பத்தூர் பால் பண்ணை வளாகத்தில் ஐஸ்கிரீம்-பனீர் (பாலாடைக் கட்டி) தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. மேலும், அதிநவீன பால்பண்ணையாக விரிவாக்கம் செய்யப்பட்ட கோவை பண்ணை, சென்னை அசோக்பில்லர், திருவான்மியூர், வண்ணாந்துறை, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் அதிநவீன ஆவின் பாலகங்கள், தேனி-திருவண்ணாமலையில் துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டடங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் பயிற்சி-ஆராய்ச்சி மையக் கட்டடங்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் சமுதாய வானொலி நிலையக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்தார்.

அடிக்கல் நாட்டு விழா: கால்நடை பராமரிப்பு-மீன்வளத் துறை நிர்வாகப் பயன்பாட்டுக்காக ஐந்து அடுக்கு பல்துறை அலுவலக வளாகம், 38 கால்நடை மருந்தகக் கட்டடங்கள், மீன்வளத் துறை சார்பில், திருவள்ளூர் பூண்டி, தருமபுரி சின்னார், கிருஷ்ணகிரி கொள்ளனூர், கரூர் குளித்தலை, திருக்காம்புலியூர், தஞ்சாவூர் தட்டான்குளம், திண்டுக்கல் அணைப்பட்டி, சிவகங்கை பிரவலூர், திருநெல்வேலி மணிமுத்தாறு ஆகிய இடங்களில் மீன் விதைப் பண்ணைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

காஞ்சிபுரம் கோவளம், கடலூர் பேட்டோடை, நாகப்பட்டினம் திருமுல்லைவாசல், சாமந்தான்பேட்டை, தூத்துக்குடி சிங்கித்துறை, பழையகாயல், கன்னியாகுமரி கடியப்பட்டிணத்தில் மீன் இறங்கு தளங்கள் ஆகியவற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

எச்சரிக்கை தகவல் பரப்பும் கருவிகள்: கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாட்டுப்படகுகளுக்கு ஆபத்துகால எச்சரிக்கை தகவல் பரப்பும் கருவிகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மீன்பிடிக்கும் போது இயற்கை சீற்ற ஆபத்துகளில் இருந்து உயிரைக் காக்க 11 ஆயிரத்து 500 உயிர்காப்பு மிதவைகள் அளிக்கும் திட்டத்தையும் தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.கே.எம்.சின்னையா, கோகுல இந்திரா, கே.ஏ.ஜெயபால், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு செயலாளர் எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.