காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு ; மருத்துவமனையில் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு ; மருத்துவமனையில் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை

புதன், செப்டம்பர் 28,2016,

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு குறித்து,சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நேற்று நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில்  தலைமைச்செயலாளர் டாக்டர் ராம மோகன ராவ், அட்வகேட் ஜெனரல்  ஆர் .முத்துகுமாரசுவாமி, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்,  முதல்வரின் முதன்மைச் செயலாளர் கே.என்.வெங்கட் ராமன் மற்றும் முதல்வரின் செயலாளர் ஏ.ராமலிங்கம்  ஆகியோர் கலந்து கொண்டார்கள். முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக அரசு காவிரியில் அடுத்து 3 நாட்களுக்கு  6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த  உத்தரவு மற்றும் அறிவுறுத்தல் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கடந்த 5.9.2016, 12.9.2016 மற்றும் 20.9.2016 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவு குறித்தும்  கடந்த  20.9.16 அன்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில்  காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகம் பூர்த்தி செய்யாதவரை அதன் மனுவை விசாரணை செய்யக்கூடாது என்றும் கூறப்பட்ட விவரம் குறித்தும்  முதல்வருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

நீர்வளத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, தமிழக மற்றும் கர்நாடக நிர்வாகக்  குழு தலைவர்கள் கூட்டத்தை அட்டர்னி ஜெனரல் நடத்தி தற்போது உள்ள தடைகளை நீக்க வழிகளை கண்டறிய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த விவரமும் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் நாளை (29-ம் தேதி) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

காவிரி நிர்வாக குழு கூட்டத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் டாக்டர் ராம மோகன ராவ், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர்  ஆர். சுப்பிரமணியம் ஆகியோர் தமிழகம் சார்பில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா  அப்போது அறிவுறுத்தியுள்ளார்.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.