கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவப் பெருமக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவப் பெருமக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

வியாழன் , டிசம்பர் 24,2015,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா, கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அனைவரிடத்தும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என தமது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில், கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், தமது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“உன் மீது நீ அன்பு செலுத்துவது போல அடுத்தவர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்” என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவ பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி, வீட்டினை அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள் – கிறிஸ்தவ மக்களின் நலனில் அக்கறை கொண்ட உங்கள் அன்பு சகோதரியின் அரசு, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது – இதன் மூலம், ஆயிரத்து 968 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைவரிடத்தும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாகக் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.