குடிசை வாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு

குடிசை வாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு

சனி, நவம்பர் 26,2016,

சென்னை, அனைத்து குடிசை வாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

குடிசைமாற்று வாரிய மாதாந்திர ஆய்வுக்கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த 16 நபர்களுக்கு ரூ.2000/ காசோலையும், நற்சான்றிதழும் வழங்கினார். அக்கூட்டத்தில், குடிசைமாற்று வாரிய செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை விரிவாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தின் முக்கிய குறிக்கோளான குடிசைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கான அரசின் திட்டங்களை விரைந்து அமுல்படுத்தி, அனைத்து குடிசைவாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யுமாறும் திட்டங்களின் அமலாக்கத்தினை விரைவுபடுத்து மாறும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை, அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி, அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தினை உறுதிசெய்யவும், முதல்வர் ஜெயலலிதாவின் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் இலக்கினை அடைய மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதிதிட்டம் என்ற திட்டத்தின் மூலம் நிதிபெற நடவடிக்கை எடுக்கவும், தற்போது பணிகள் நடைபெற்று வரும் வீடுகளின் கட்டுமான பணியினை விரைந்து முடிக்கவும், கட்டிடங்களின் தரத்தினை உறுதி செய்திடவும், பழுதுபார்த்தல் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கிடவும் அறிவுரைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் மற்றும் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,  தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் முதன்மை செயலர் மற்றும் மேலாண்மை இயக்குநர், ஷம்புகல் லோலிகர், பல்வேறு பிரிவுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களும் பங்கேற்றனர்.