குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு குறித்து, கழகப் பொதுச் செயலாளர்தான் முடிவு செய்வார்,அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது : டிடிவி தினகரன் அதிரடி

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு குறித்து, கழகப் பொதுச் செயலாளர்தான் முடிவு செய்வார்,அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது : டிடிவி தினகரன் அதிரடி

ஜூன்,21 , 2017 ,புதன்கிழமை,

சென்னை : அமைச்சர்களை நீக்கும் அதிகாரமும் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் என்னிடமே இருக்கிறது. இதனை பயன்படுத்தி அமைச்சர்கள் உள்ளிட்ட யாரையும் என்னால் நீக்க முடியும் என்றும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு குறித்து, கழகப் பொதுச் செயலாளர்தான் முடிவு செய்வார் என்றும் தினகரன் கூறினார்.

நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திரு. டிடிவி தினகரன், குடியரசுத் தலைவர் தேர்தலில், ‘அ.இ.அ.தி.மு.க. அம்மா’ ஆதரவு யாருக்கு என்பது குறித்து, கழகப் பொதுச் செயலாளர் சசிகலாதான் முடிவு செய்வார் என தெரிவித்தார்.

கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எனக்கே அத்தனை அதிகாரமும் உள்ளது. என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அமைச்சர்கள் சிலர் அதுபோன்று கூறி வருகிறார்கள். இது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. இந்த அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்? என்பதை அவர்களிடமே போய் கேளுங்கள்.

என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரமும் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் என்னிடமே இருக்கிறது. இதனை பயன்படுத்தி அமைச்சர்கள் உள்ளிட்ட யாரையும் என்னால் நீக்க முடியும். இதனை அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு எப்போது செல்வீர்கள் என்று எல்லோருமே என்னிடம் கேட்கிறார்கள். பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்த கேள்வி என்னிடம் அதிகம் கேட்கப்படுகிறது. அதற்கான காலம் வரும். அப்போது கட்சி அலுவலகத்துக்கு நான் நிச்சயமாக செல்வேன். 60 நாட்கள் கழித்து அரசியல் பணிகளில் நிச்சயமாக தீவிரம் காட்டுவேன். என்னைப் பொறுத்தவரையில் நான் எதற்கும் பயப்படாதவன். என் மீது எந்த தவறும் இல்லை. எனவே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வழக்காக இருந்தாலும் சரி, எந்த வழக்காக இருந்தாலும் சரி அதனை துணிச்சலுடன் எதிர்கொள்வேன். இவ்வாறு தினகரன் கூறினார்.